வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா – சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இரு நாடுகளின் எல்லை விவகாரக் குழுவினர் சந்தித்து கள நிலவரத்தை ஆய்வு செய்தனர்.
கடந்த, 2020ல் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்தியா முறியடித்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்பு படைகளும் எல்லையோரம் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, துாதரகம் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இடையே பேச்சு நடந்து வருகிறது.
இதன்படி, கிழக்கு லடாக் எல்லையில் இருந்து சீன ராணுவம் வாபஸ் பெற்றது. எனினும் இன்னும் சில இடங்களில் சீனப் படைகள் உள்ளன. அவற்றை முழுவதுமாக வாபஸ் பெறுவது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. இந்தாண்டு மார்ச்சில் இந்திய – சீன ராணுவ தளபதிகள், 15வது கட்ட பேச்சு நடத்தினர்.
இந்நிலையில் இந்திய – சீன எல்லையின் மேற்கு பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை இயக்குனரக உயரதிகாரி தலைமையிலான குழுக்கள் நேற்று சந்தித்து பேசின.
அப்போது ‘கிழக்கு லடாக் எல்லையில் உள்ள சீன படைகளை முழுமையாக வாபஸ் பெற்றால் மட்டுமே இரு நாடுகள் இடையிலான நல்லுறவு மேம்படும்’ என, இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பு ராணுவ தளபதிகளின், 16வது கட்ட சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்வது என, இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
Advertisement