சென்னை: ரூ.5 ஆயிரம் செலுத்தி ‘தட்கல்’ முறையில் உடனடியாக பத்திரங்களை பதிவு செய்யும் முறை, முதல்கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஏப்.28-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய பதிவுத் துறை அமைச்சர், ‘‘பத்திரப் பதிவை குறுகிய கால அவகாசத்தில் மேற்கொள்ள வசதியாக ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கன்களை கூடுதல் கட்டணம் பெற்று ‘தட்கல்’ முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக விதிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இதை செயல்படுத்தும் விதமாக பதிவுத் துறை தலைவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘பத்திரப் பதிவுக்காக இணையத்தில் பொதுமக்கள் விவரங்களைப் பதிவு செய்யும்போது, அவர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரம், பதிவு தேதியை பார்வையிட முடியும்.
குறிப்பிட்ட நேரம், தேதியில் பதிவு செய்ய டோக்கன் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 100 டோக்கன்கள் 6 ஸ்லாட்களாக வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அதிகப்படியாக இரண்டு சார்பதிவாளர்கள் ஒரே அலுவலகத்தில் அமர்ந்து 200 பதிவுகளையும் மேற்கொள்கின்றனர். இருப்பினும் பொதுமக்களில் சிலர் ஏமாற்றமடைகின்றனர்.
எனவே, பொதுமக்கள் விருப்பப்படி பதிவு செய்யும் வகையில் ரூ.5 ஆயிரம் செலுத்தி ‘தட்கல்’ முறையில் டோக்கன் பெற்று பதிவு மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இத்திட்டப்படி, ‘தட்கல்’ டோக்கன்கள் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும். பதிவு நேரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் இல்லை என்றால் டோக்கன் செல்லாது. கட்டணமும் திரும்பத் தரப்படாது. ‘தட்கல்’ டோக்கன் பெற 2 மாதங்கள் முன்னதாகவே, முன்பதிவு தொடங்கப்படும். இத்திட்டத்தை தொடங்கும் வகையில், டோக்கன்களை வழங்க அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரினார்.
இதை பரிசீலித்த தமிழக அரசு, ‘தட்கல்’ முறையில் டோக்கன் வழங்கி பதிவு செய்யும் முறைக்கு அனுமதியளித்துள்ளது. இந்த ‘தட்கல்’ பதிவு முறை, தமிழகத்தில் முதல் கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, காலை 10 முதல் 11 மணி வரை – 2, 11 முதல் 12 மணி வரை – 2, 12 முதல் 1 மணி வரை – 2, 1 மணி முதல் 1.30 மணி வரை – 1, 2 முதல் 3 மணி வரை – 2, 3 முதல் 3.30 மணி வரை – 1 என வழக்கமான டோக்கன்களுக்கு இடையே 10 ‘தட்கல்’ டோக்கன்கள் வரை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.