தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.என்.ரவி பேசிவருகிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க உறுதியாக இருக்கிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தபோது, அதை தமிழகத்தில் எதிர்க் கட்சியாக இருந்த தி.மு.க கடுமையாக விமர்சித்தது. ஆட்சிக்கு வந்த பிறகும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தி.மு.க கூறுகிறது.
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் அதை அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையில், மத்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர், மாநில அரசின் கொள்கைக்கு எதிராகப் பேசிவருவது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் கூட்டத்தை ஆளுநர் ரவி கூட்டினார். அப்போது, தமிழ்நாடு 20 பல்கலைக்கழகங்களைக் கொண்டிருப்பதையும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதையும் அவர் பாராட்டினார். மேலும், உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக இருப்பதாகக் கூறிய ஆளுநர், கல்வித் திறன் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துமாறு துணைவேந்தர்களை கேட்டுக்கொண்டார். துணைவேந்தர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களின் பலம், பலவீனம் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல திட்டங்கள் உள்ளதால், பல்கலைக்கழகங்களில் அதை அமல்படுத்த முன்வரவேண்டும் என்று துணை வேந்தர்களிடம் ஆளுநர் பேசியதாகவும் தகவல் வெளியானது. தமிழக ஆளுநராக வந்த பிறகு தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அவர் பேசியது அதுதான் முதன்முறை. மாநில அரசின் கொள்கைக்கு எதிராக அப்படி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பிறகு, தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அவர் அவ்வப்போது பேசிவருகிறார். ‘புதிய தேசிய கல்விக்கொள்கையால் முன்னேற்றப் பாதையில் நாடு வேகமாகச் செல்லும். கல்வி கொள்கையை அரசியல் ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாசாரம், பாரம்பர்யம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றை புதிய தேசிய கல்விக்கொள்கையால் மீட்டெக்க முடியும்’ என்றெல்லாம் ஆளுநர் ரவி பேசுகிறார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேசிவரும் விவகாரம், தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது மீண்டும் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக அவர் பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த மே 30-ம் தேதி நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பேசிய ஆளுநர் ரவி, “கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில் கலந்துகொண்டவர்கள் பல யோசனைகளைத் தெரிவித்தனர். தற்போது இருக்கும் கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். இதுவரை தேசத்தை நாம் பார்த்த பார்வை சற்று சரியாக இல்லை என்று சொல்ல வேண்டும். ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வுடன் கல்விக் கொள்கையை அணுகியிருக்கிறோம்” என்றார்.
மேலும், “புதிய தேசிய கல்விக் கொள்கை தொலைநோக்கு, மாற்றத்துக்கான கல்வியை நோக்கமாகக் கொண்டது. இது மாணவ, மாணவியருக்கு கூடுதல் ஆற்றலையும் அறிவையும் வழங்கும். நமது கல்வியில் புதிய மாற்றங்களை முன்னெடுக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியில் மாற்றம் கொண்டு வருவதே இந்தியாவின் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும். படிப்பை பாதியில் கைவிட்டாலும், மீண்டும் தொடர புதிய தேசிய கல்விக் கொள்கையில் வாய்ப்பு உள்ளது.
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு புதிய தேசிய கல்விக் கொள்கை தவிர்க்கப்படுகிறது. முதலில் அந்த கொள்கை என்னவென்று அரசியல் தலைவர்கள் படிக்க வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை. அதை முழுமையாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அறிந்து, அதிலுள்ள சிறப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகே அது தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்” என்றார் ஆளுநர்.
அத்துடன் ஆளுநர் தன் பேச்சை நிறுத்திக்கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அமைச்சர் பொன்முடியிடம், “தயவு செய்து தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள். அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்…” என்று ஆளுநர் கூறினார்.
முதன்முறையாக துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியபோது, தேசிய கல்விக் கொள்கை குறித்து அவர் பேசிய கருத்துகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அப்படி ஆளுநர் பேசியிருக்கிறார் என்று வெறும் தகவலாகத்தான் வெளியானது. இப்போது உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் முகத்துக்கு நேராக வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதற்கு எதிராக தி.மு.க-வினர் சிலர் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்திருக்கிறார்கள். தி.மு.க அரசுடன் மோதல் போக்கை தொடரும் ஆளுநருக்கு மத்திய ஆட்சியாளர்களின் முழுமையான ஆதரவு இருக்கிறது. எனவே, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான தன் நிலைப்பாட்டை இன்னும் அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து அவர் முன்வைப்பார் என்றே தெரிகிறது. தமிழ்நாடு அரசு இதற்கெல்லாம் எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!