உயிர் கொல்லும் ரசாயன ஆயுதம்ஐ.நா.,வில் இந்தியா எச்சரிக்கை| Dinamalar

நியூயார்க்:உயிர் கொல்லும் ரசாயனங்களை பயங்கரவாதிகள் பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எச்சரித்து உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அணு ஆயுதங்கள், ரசாயனம், வைரஸ்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பேரழிவு ஆயுதங்களின் பரவலை தடுக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.
இதில் ஐ.நா.,விற்கான இந்திய துாதரக குழு ஆலோசகர் அமர்நாத் பேசியதாவது: பயங்கரவாதிகள், உள்நாட்டு போராளிகள் உள்ளிட்டோருக்கு பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதற்கான வைரஸ்கள், ரசாயனக் கலவைகள் கிடைப்பதை தடுக்க வேண்டும். ஏவுகணைகள், ஆளில்லா குட்டி விமானங்கள் போன்றவை பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் கிடைக்கின்றன. இதனால் பேரழிவு ஆயுதப் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கொரோனா பரவும் இக்காலத்தில் வைரஸ்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை ஆயுதங்களாக பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் இருப்பதை நாம் மறக்க முடியாது. பயங்கரவாதிகள் குறுகிய காலத்தில் பேரழிவு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என, அமெரிக்க புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது.
எனவே, பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் ஆகியோருக்கு பேரழிவு சாதனங்கள் கிடைப்பதை தடுக்க, முன்னுரிமை அளிக்கும் பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. இதற்கான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறது. இது குறித்து பரவலான விவாதம் நடத்தவும் விரும்புகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.