பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தான் ஒரு சிறிய வீரனாக செயல்படப்போவதாக ஹர்திக் படேல் கூறியுள்ளார். ஹர்திக் படேல் இன்று முறைப்படி பாஜகவில் இணைவார் என்ற தகவல்கள் மட்டும் வெளியான நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹர்திக் படேல் இந்தியில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
அதில், ”நான் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கவுள்ளேன். தேசிய, சமூக, பிராந்திய நலனுக்கான எண்ணங்களுடன் இந்த அத்தியாயம் தொடங்குகிறது. தேசத்துக்கான மாபெரும் சேவையில் நான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறிய வீரனாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஹர்திக் கடந்து வந்த பாதை: குஜராத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல் (28). இவர், காங்கிரஸில் சேர்ந்து பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
குஜராத் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், சமீபகாலமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஹர்திக் படேல், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். 3 ஆண்டு காலத்தை காங்கிரஸில் இருந்து வீணடித்துவிட்டதாகவும் விமர்சனம் செய்தார். குஜராத் காங்கிரஸ் தலைவர்களுக்கு மக்கள், தேர்தல் என எதைப்பற்றியும் கவலை இல்லை, டெல்லி தலைவர்கள் குஜராத் வந்தால் அவர்களுக்கு சிக்கன் சாண்ட்விச் உறுதி செய்வதில் மட்டுமே அக்கறை என்று கூறினார்.
இதையடுத்து கடந்த 18-ம் தேதி (மே 18) காங்கிரஸில் இருந்து விலகினார். பாஜக தலைமையை புகழ்ந்து கருத்து தெரிவித்தார். அதனால், அவர் பாஜகவில் சேரலாம் என்று செய்திகள் வெளியானது. ஒருபுறம் அவர் ஆம் ஆத்மியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவில் இணைவதை ஹர்திக் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பாஜகவில் இணையும் அவருக்கு குஜராத் சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பட்டிதார் சமூக மக்களிடையே செல்வாக்கு பெற்ற ஹர்திக் படேல், பாஜகவில் இணைவது அக்கட்சிக்கு பலமாகவும் காங்கிரஸுக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஹர்திக் படேல் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹர்திக் படேலின் விலகல் காங்கிரஸுக்கு குஜராத்தில் மிகப்பெரிய சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது.