கிடைத்தது வங்கி வேலை… ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தி இளம் பெண்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் வில்வராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பொய்யாமொழி. இவர், அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவரின் மகள் பெயர் நிலவழகி. பொறியியல் பட்டதாரியான இவர், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின், ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்த நிலவழகி… சென்னையில் உள்ள அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாக கூறி, தனது பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

நிலவழகி

அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில் வழங்கியுள்ளார். இந்நிலையில், தலைவர் பதவிக்கான அதிகாரம் துணைத் தலைவருக்கு ஒருமனதாக வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து நிலவழகியிடம் பேசினோம். “மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றுதான் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு, மக்களால் தேர்வு செய்யப்பட்டேன். இதுவரை அந்த பணியை சிறப்பாக செய்து வந்தேன். இந்நிலையில், நான் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனவே, எதிர்காலத்தை கருதி, தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். பதவியில் இருந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை, பதவி இல்லாமலும் கூட நல்லது பண்ணலாம். ஆகவே, அப்பாவுடன் சேர்ந்து எப்போதும் போல மக்களுக்கு நல்லது செய்வோம்” என்றார்.

ஊராட்சி மன்ற அலுவலகம் – மேல் வில்வராயநல்லூர்

வங்கியில் வேலை கிடைத்ததால், பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் அப்பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.