தெலங்கானா உதயமான நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. இது இந்தியாவின் 29ஆவது மாநிலமாக உருவானது. புதிய மாநிலமான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். அவரே தற்போதும் முதல்வராக பதவியில் நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், தெலங்கானா தனி மாநிலமாக உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட தெலங்கானா மாநிலம் பாராட்டதக்க வளா்ச்சியை அடைந்து உள்ளது. நாட்டின் தொழில் மையமாகவும் உருவெடுத்துள்ளது. அது தொடர்ந்து செழித்து, மக்களின் எண்ணங்களை, ஆசைகளை நிறைவேற்ற விரும்புகிறேன்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தெலங்கானா மக்கள் கடின உழைப்பு மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான இணையற்ற அர்ப்பணிப்புடன் உள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் கலாசாரம் உலகப் புகழ்பெற்றது. தெலங்கானா மக்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஹைதராபாத் சமஸ்தானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி ஸ்ரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.

இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை 1953ஆம் ஆண்டு ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில், நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் பரிந்துரைத்தது.

ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை 1956ஆம் ஆண்டு நிறுவியது. இருப்பினும், தெலங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து கொண்டே இருந்தன. இது 2009ஆம் ஆண்டு உச்சத்தை தொட்டது. தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்தன.

இதையடுத்து, தெலங்கானா மாநிலம் அமைவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன்பிறகு, 2014ஆம் ஆண்டில் தெலங்கானா தனி மாநிலமாக உருவானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.