காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா அளித்த பேட்டியில், “சோனியா காந்தி கடந்த வாரம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், செயற்பாட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து கரோனா பரிசோதனை செய்தார். அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவ ஆலோசனையின்படி அவர் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜூன் 8ல் நடைபெறவுள்ள அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவதில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை” என்று கூறினார்.
முன்னதாக நேற்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி இன்றும், சோனியா காந்தி 8 ஆம் தேதியும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சோனியா காந்திக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் அமலாக்கத் துறையில் ஆஜராக அவகாசம் கூறியுள்ளார்.
கரோனா தொற்று அதிகரிப்பு: நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,712 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் இதுவரை கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,31,64,544 ஆக உள்ளது. நாடு முழுவதும் 19,509 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் தொற்றால் இறந்த நிலையில், கரோனாவால் உயிரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,24,641 ஆக அதிகரித்துள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் ( அதாவது 100ல் எத்தனை பேருக்கு தொற்று என்ற அளவு) 0.60% ஆக உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.56 சதவீதமாக உள்ளது.
கரோனாவால் இருந்து மீள்வோர் விகிதம் 98.74% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2584 பேர் குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,20,394 ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 193.70 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.