'கைதி' படத்தின் தொடர்ச்சியா 'விக்ரம்'?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'விக்ரம்'. இப்படம் நாளை ஜுன் 3ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'கைதி' படத்தின் தொடர்ச்சி என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். அதனால்தான் 'விக்ரம்' படத்தில் 'கைதி' படத்தில் நடித்த நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஸ் உத்தமன், அருள்தாஸ், ஹரிஷ் பெரடி ஆகியோரும் நடித்திருக்கிறார்களாம்.
'கைதி' படத்தின் தொடர்ச்சியாக 'விக்ரம்' படத்தின் கதையை எடுக்க வேண்டுமானால் 'கைதி' படத்தின் தயாரிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதியை கமல்ஹாசனே நேரடியாகப் பேசி பெற்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
'கைதி' படம் எந்த அளவிற்கு பரபரப்பாக இருந்தததோ, அதை விட பல மடங்கு 'விக்ரம்' திரைக்கதை பரபரப்பாக இருக்குமாம். 'விக்ரம்' படத்தின் தொடர்ச்சியாக 'கைதி 2' படம் இருக்கும் என்கிறார்கள். அதில் சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பது உறுதியாம். அதில் கமல்ஹாசனும் இணைவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
'விக்ரம்' படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்தது போல 'கைதி 2' படத்தில் கமல்ஹாசனும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம். லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம். அது முடிந்த பின் 'கைதி 2' ஆரம்பம் என்பது கோலிவுட்டில் ஒரு பரபரப்பான தகவல்.