ரத்தப்புற்றுநோய் பாதிப்பும் ரஷ்ய அதிபர் புதின் வாழ்நாள் குறித்த சர்ச்சையும்… -மருத்துவர் விளக்கம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ரத்தப்புற்றுநோய்க்கு ஆட்பட்டிருப்பதால் இன்னும் 3 ஆண்டுகளில் அவர் இறந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக உளவாளிகள் தெரிவித்த செய்தி உலகெங்கும் பரவி வருகிறது.

புற்றுநோயின் விளைவாக அவரது பார்வைத்திறன் குறைந்துவிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கின்றனர். அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இப்படியாக முன்கூட்டியே மரணத்தை கணிக்க முடியுமா? என சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் பாண்டியன் பாஸ்கர் ராவிடம் கேட்டோம்…

“எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும் அதில் பல வகைகளும், வேறுபாடுகளும் இருக்கும். லுக்கேமியா என்கிற ரத்தப்புற்றுநோயிலேயே அக்யூட் லுக்கேமியா, க்ரானிக்கல் லுக்கேமியா என்கிற வகைகள் உண்டு. அவற்றுள் மைலாய்டு, லிம்பாய்டு என்கிற வகைகளும் அடக்கம். புற்றுநோயின் வகை மற்றும் அதன் தன்மையை ஆராய்ந்த பிறகுதான் நோயாளியின் வாழ்நாள் குறித்துக் கூற முடியும்.

பாண்டியன் பாஸ்கர் ராவ்

மிக மோசமானது, மோசமானது, குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என புற்றுநோயின் தன்மையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அத்தன்மைக்கு ஏற்றவாறு அவர்களுக்கான சிகிச்சையும் வாழ்நாளும் கணிக்கப்படும். அப்போது கூட குறிப்பிட்ட ஆண்டுகள் வரை வாழ்வார்கள் என்றுதான் சொல்லப்படுமே தவிர குறிப்பிட்ட ஆண்டுக்குள் இறந்து விடுவர் என்று சொல்ல மாட்டார்கள்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு எந்த விதமான புற்றுநோய் என்று சொல்லப்படவில்லை. அப்படியிருக்கையில் அவர் 3 ஆண்டுகளில் இறந்து விடுவார் என்று சொல்லப்படுவதாகப் பரப்பப்படுவது மருத்துவது ரீதியாக ஏற்புடையதல்ல. இந்தக்கூற்றின் அடிப்படையே தவறாக இருக்கிறது. புற்றுநோயை முழுமையாக ஆராய்ந்து அனைத்து சாத்தியங்களும் தெரிந்த பிறகுதான் உறுதியான முடிவினைக் கூற முடியும். பொத்தாம்பொதுவாக இத்தனை ஆண்டுகள் வரைதான் உயிரோடிருப்பார் என்றெல்லாம் கூற முடியாது” என்றவர் புற்றுநோய் காரணமாக புதினின் பார்வை மங்கி வருகிறது என்று சொல்லப்படுவதையும் மறுக்கிறார்.

புற்று நோய்

“60 வயதைக் கடந்தவர்களுக்குப் பார்வை குறைபாடு வருவது இயல்பு. பார்வைக்குறைபாடு ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. கொழுப்பு, நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை போன்ற காரணிகளில் புற்றுநோயும் அடக்கம் என்றாலும் அதன் சதவிகிதம் குறைவு. பத்து காரணிகளில் பத்தாவது காரணியாகத்தான் புற்றுநோய் இருக்கும்.

புதினின் வயதில் ஏற்படும் இயல்பான பிரச்னையைக்கூட புற்றுநோயோடு தொடர்புபடுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அதிபர் புதினுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிடமிருந்து அதிகாரபூர்வமான அறிக்கை வெளியானால் மட்டும்தான் நாம் இதனை நம்ப வேண்டும்” என்கிறார் பாண்டியன் பாஸ்கர் ராவ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.