ஜூன் 10-ல் உள்கட்சி தேர்தல் தொடக்கம்: சோக கீதம் பாடும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்களே அது அரசியலை பொறுத்தவரை தமிழக காங்கிரசுக்கு நிரந்தரமான உதாரணமாக மாறிவிடும் போல் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு காங்கிரசில் இருந்த ஒவ்வொருவரும் எப்படி உழைத்தார்களோ அதேபோன்றுதான் சுதந்திரத்துக்கு பிறகும் கட்சி நலனுக்காக உழைத்தார்கள். இதனால்தான் சுதந்திரம் அடைந்தபிறகு சுமார் 10 ஆண்டுகள்
காங்கிரஸ்
கட்சி அசைக்க முடியாத இடத்தில் இருந்தது.

1950களில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே கிடையாது என்ற அளவுக்கு
காங்கிரஸ்
எட்ட முடியாத உச்சத்தில் இருந்தது. ஆனால் இது காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் மிகவும் மிதப்பில் இருக்க வைத்துவிட்டது. அதனால்தான் அடுத்து வந்த தேர்தல்களில் இருந்து காங்கிரஸ் சரிவு பாதைக்கு செல்ல தொடங்கியது.

காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜி இதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தார். அதே கால கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்த தி.மு.க. ஓசையின்றி வளர்ந்தது. 1957-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. 15 இடங்களில் வெற்றிபெற்ற போதுதான்
காங்கிரஸ்
தலைவர்கள் சற்று உஷாரானார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் காமராஜர் தி.மு.க.வை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய தீவிர முயற்சிகள் செய்தார்.

1962-ம் ஆண்டு தேர்தலில் காமராஜர் தி.மு.க.வுக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை கையில் எடுத்தார். 1957-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற 15 இடங்களில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கக்கூடாது என்று திட்டமிட்டு வலுவான வேட்பாளர்களை களம் இறக்கினார். காமராஜரின் திட்டப்படி அந்த 15 தொகுதிகளிலும் கருணாநிதி போட்டியிட்ட தொகுதி தவிர அண்ணா உள்பட 14 பேர் தோல்வியை தழுவினார்கள்.

ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க. 50 இடங்களில் வென்று காங்கிரசுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. அதற்கு பிறகு 1967-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.விடம்
காங்கிரஸ்
ஆட்சியை பறிகொடுத்தது. அன்று முதல் இன்று வரை கடந்த 55 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி கட்டில் என்பது வெறும் பகல் கனவாகவே இருந்து வருகிறது. இந்த 55 ஆண்டுகளில் தமிழக காங்கிரஸ் எத்தனையோ தலைவர்களை பார்த்துவிட்டது. சில தலைவர்கள் திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக சீறி பாயும் வகையில் இருந்தனர். ஆனால் தமிழக காங்கிரஸ் ஒரு இஞ்ச் கூட வளராமல் போனது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

1989-ல் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றிபெற்றது. சுமார் 20 சதவீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றிருந்தது. அதே தீரத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்காக உழைத்திருந்தால் இன்று காங்கிரஸ் சற்று உன்னதமான இடத்தில் இருந்திருக்கும். ஆனால் தமிழக சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறுகள் தமிழக காங்கிரசை தலைகுப்புற தள்ளிவிட்டன.

1991-ம் ஆண்டு முதல் இன்று வரை தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி மாறி கூட்டணி அமைத்து கொண்டிருக்கும்
காங்கிரஸ்
தற்போது கூட்டணி இல்லாமல் வாழ முடியாது என்ற பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது. 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி வெறும் 4 சதவீதம் என்று இருந்தது. அதன்பிறகு வந்த தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் செல்வாக்கு தேய்பிறையாகவே இருக்கிறது.

இதை வளர்பிறையாக மாற்றுவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்கள். எதுவும் கை கொடுக்கவில்லை.

அடுத்து 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய நிர்பந்தத்தில் தமிழக காங்கிரஸ் இருக்கிறது. இதற்காக சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்தனையாளர் அரங்கை காங்கிரஸ் தலைவர்கள் நடத்தினார்கள். அதில் ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி, 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை என்றெல்லாம் கொள்கை முடிவுகளை எடுத்தனர். இந்த திட்டங்களை காங்கிரஸ் கடைபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு மாதத்துக்குள்ளேயே ராஜஸ்தான் மாநாடு முடிவுகளை மேலிட தலைவர்கள் மறந்து போனார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் வருகிற 10-ந் தேதி தமிழக காங்கிரஸ் உள்கட்சி தேர்தலை தொடங்க இருக்கிறது. ஆகஸ்டு மாதத்திற்குள் புதிய தலைவர்களுடன், புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு தமிழக காங்கிரஸ் எப்படி தயாராகிறது என்று ஆய்வு செய்தபோதுதான் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் சோக கீதம் பாடி கொண்டிருப்பது தெரியவந்தது.

கட்சி வளர்ச்சிக்கு மூத்த தலைவர்கள் யாரும் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்ற ஆதங்கம் தமிழக காங்கிரசில் உள்ள இளைஞர்கள் மனதில் குமுறலாக இருந்து கொண்டே இருக்கிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்ந்து புறக்கணிப்பு செய்யப்படுகிறார்கள் என்ற எண்ணம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.

சமீபத்தில்கூட பாராளுமன்ற மேல்சபைக்கு காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் சராசரியாக 70 வயதுடையவர்கள். இது இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாராளுமன்றத்தில் அனுபவம் இருந்தால்தான் பேச முடியுமா? இளைஞர்களால் பேச முடியாதா? என்று காங்கிரசில் உள்ள இளைய தலைமுறையினர் கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் புதிய உறுப்பினர்கள் யாரும் காங்கிரஸ் பக்கம் தலைவைத்துகூட படுப்பதில்லை என்ற நிலைதான் இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள், 32 துணை தலைவர்கள், 56 மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்று காங்கிரசுக்கு மிகப்பெரிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்து இருந்தனர். இவ்வளவு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட பிறகும்கூட தமிழக காங்கிரசை தூக்கி நிறுத்த முடியவில்லை.

இதற்கிடையே புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அலையாய் அலைகிறார்கள். ஆனால் புதிதாக ஒரு உறுப்பினரை சேர்ப்பதுகூட மிகப்பெரிய சவாலாக அவர்களுக்கு மாறி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரசில் இருக்கும் நல்ல திறமையான இளைஞர்களை காங்கிரஸ் மேலிடம் தக்க வைக்கவில்லை. இரண்டாவது இளைஞர்களை அரவணைத்து தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் தலைவர்களும் இல்லை.

இப்படி இருந்தால் தமிழக காங்கிரசை எப்படி வளர்க்க முடியும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் பரிதாபமாக கேட்கிறார்கள்.

2019-ம் ஆண்டு தலைவர் பதவிக்கு வந்த கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதில் வெற்றி கண்டார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் காங்கிரசை வளப்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் எந்த மாற்றத்தையும் அவராலும் செய்ய முடியவில்லை. இப்படியே தொடரும் நிகழ்வுகளால் காங்கிரஸ் இன்று கரைந்து கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

அடுத்து தமிழக காங்கிரசின் உள்கட்சி தேர்தலின் முடிவை பொறுத்துதான் அதன் எதிர்காலம் இருக்கிறது. தலைவராக வரப்போவது ஒரு பெண்தான் எனறு சொல்கிறார்கள். அவராவது காங்கிரசை தூக்கி நிறுத்துவாரா? என்று பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.