குல்காம்: காஷ்மீரில் இன்று காலை வங்கி மேலாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதிகரிக்கும் இத்தகைய திட்டமிட்ட படுகொலைகளால் அம்மாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ளது இலாகி தேஹாதி வங்கி. இந்த வங்கியின் மேலாளராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இன்று (ஜூன் 2) காலை வழக்கம்போல் அவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து விஜயகுமார் நோக்கி இரண்டு, மூன்று முறை சுட்டார். இதில் விஜயகுமார் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்த சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சம்பவம் நடந்த பகுதியை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்காத நிலையில், போலீஸார் இந்தப் படுகொலையில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து தாக்குதல்கள்: இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜம்முவில் ரஜினி பாலா என்ற ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். இதுவும் குல்காம் பகுதியில் ஒரு பள்ளியின் வாயிலில் நடந்தது.
சோஃபியான் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 1) மாலை ஃபரூக் அகமது ஷேக் என்ற நபர் தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் சுடப்பட்டார். நல்வாய்ப்பாக அவர் காயங்களுடன் தப்பித்தார். இன்று அதிகாலை சோஃபியான் மாவட்டத்தில் வாகனத்தில் இருந்த வெடிப்பொருள் வெடித்ததில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதில் ஒரு வீரரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த மூவரும் தீவிரவாத தடுப்பு ஆபரேஷனுக்காக தனியார் வாகனத்தின் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த வெடிப்பொருள் வெடித்துள்ளது. தனியார் வாகனத்தில் ஏன் சென்றனர். அதில் யார் வெடிப்பொருளை வைத்தது என்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வங்கி மேலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களில் குல்காமில் மட்டும் இரண்டு படுகொலைகள், சோஃபியானில் இரண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.
குல்காம் படுகொலைக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்த விஜயகுமார் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் பண்டிட்டுகள் கவலை: திட்டமிட்டு படுகொலைகள் தொடர்கதையாகி வரும் சூழலில், காஷ்மீர் பண்டிட்டுகள் தங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என அச்சம் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்பட்டது. பின்னர் காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அங்கு, பண்டிட்டுகளை மீண்டும் அங்கு குடியமர்த்துவோம் என்று பாஜக சூளுரைத்தது. பிரதமர் மோடியின் பெயரில் உருவாக்கப்பட்ட சிறப்பு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 4000 காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீரின் பல்வேறு பணிகளில் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால், சமீபமாக அதிகரிக்கும் படுகொலைகளால் அங்கிருந்து வெளியேற காஷ்மீரி பண்டிட்டுகள் விரும்புகின்றனர். ஆனால், யூனியன் பிரதேச அரசு தங்களை வெளியேற அனுமதிக்காமல் தடுப்பு வேலிகளை வைத்து அடக்குமுறை செய்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அன்றாடம் அங்கு சாலைகளில் திரண்டு காஷ்மீரி பண்டிட்டுகள் போராடி வருகின்றனர்.
காஷ்மீரில் இதுவரை நடந்துள்ள திட்டமிட்ட படுகொலைகள் அனைத்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உள்ளூர் மத, மொசி சிறுபான்மையினர் ஆகியோரை குறிவைத்தே நடத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரே மாதத்தில் 7 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். 5 நாட்கள் இடைவெளியில் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன. இப்போது இந்த ஆண்டு மீண்டும் இந்த படுகொலைகள் ஆரம்பித்துள்ளன. இதுவரை பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.