ஆடுஜீவிதம் வெளிநாட்டு படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த ஏ.ஆர்.ரஹ்மான்
பிரித்விராஜ் நடிப்பில் கடந்த சில வருடங்களாகவே விட்டுவிட்டு படப்பிடிப்பு நடைபெற்று வரும் படம் ஆடுஜீவிதம். இயக்குனர் பிளஸ்சி இயக்கிவரும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறும் விதமாக கதை அமைந்திருக்கிறது. அந்தவகையில் கொரோனா முதல் அலையின்போது ஜோர்டன் நாட்டில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் லாக்டவுன் காரணமாக அங்கேயே மூன்று மாதங்கள் படக்குழுவினர் தங்க நேர்ந்தது. அதைத்தொடர்ந்து கேரளா திரும்பியவர்கள் மீண்டும் மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் தான், விடுபட்ட படப்பிடிப்பை நடத்துவதற்காக மீண்டும் ஜோர்டானுக்கு கிளம்பி சென்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஜோர்தானில் நடைபெற்றுவரும் ஆடுஜீவிதம் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.. இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, “இரண்டு நாட்களுக்கு மொபைலும் இன்டர்நெட்டும் எதுவும் இல்லை.. வெறும் ஒட்டகங்களும் ஆடுகளும் மட்டுமே நண்பர்களாக” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது வருகையால் தானும் படக்குழுவினரும் சிறப்பு பெற்றுள்ளதாக தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் ஏ.ஆர்.ரகுமானிடம் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.
இந்த படத்தில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் இளைஞனாக நடிக்கிறார் பிரித்விராஜ், கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். மோகன்லால் நடித்த யோதா படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் மீண்டும் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.