சென்னை:
சென்னை எழும்பூர்-மதுரை இடையே தேஜாஸ் சொகுசு ரெயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரெயில் எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10-30 மணிக்கு எழும்பூர் வந்தடைகிறது.
ஏ.சி.சேர்கார், பிசினஸ் கிளாஸ், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு என 3 வகையான கட்டணம் இதில் விதிக்கப்படுகிறது. உணவு, செய்திதாள், டீ, காபி போன்றவை வழங்கப்படுகிறது.
இந்த சொகுசு ரெயிலில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுவதற்காக கட்டணம் கூடுதலாக விதிக்கப்படுகிறது.
டி.வி. விளையாட்டு சேனல், விசாலமான இருக்கை, தூய்மை பணி போன்றவற்றிற்காக கட்டணம் அதிகம் செலுத்தியும் இவை எதுவும் முறையாக வழங்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.
தொடக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த ரெயில் இப்போது மிகவும் மோசமான நிலையில் ஓடுகிறது.
ரெயில் பெட்டிகளில் டி.வி. ஸ்கிரீன் பெயருக்கு தான் உள்ளது. அது செயல்படவில்லை. அதேபோல் ஒவ்வொரு இருக்கையின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள டி.வி. ஸ்கிரீன் எதுவும் இயங்கவில்லை. எல்லாம் காட்சி பொருளாகவே உள்ளது. பயணிகள் இருக்கைக்கு பின்னால் உணவு சாப்பிடக்கூடிய ஸ்டேண்ட் எதுவும் சுத்தம் செய்யப்படுவது இல்லை. உணவு கழிவுகள் அதில் அப்படியே இருப்பதால் பயணிகள் அதில் வைத்து சாப்பிட விரும்பவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:-
தேஜாஸ் ரெயிலில் நான் பயணம் செய்த அனுபவம் மறக்க முடியாது. பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தருவதற்காகத்தான் இந்த ரெயிலில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் மிக மோசமான பராமரிப்பின் காரணமாக பெட்டியில் துர்நாற்றம் வீசுகிறது. உணவு கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் வழியில் கொட்டப்பட்டுள்ளது. பயணிகள் சாப்பிட்ட உணவு பொருட்களின் கழிவுகள் பெட்டியில் அப்படியே கிடக்கிறது.
பெட்டியில் சிதறி கிடக்கும் உணவு கழிவுகளால் கரப்பான் பூச்சி நடமாடுகிறது.
சாதாரண பயணிகள் ரெயிலை விட மோசமாக பராமரிக்கப்படுவதால் மக்கள் பயணம் செய்ய தயங்குகிறார்கள்.
அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்யும்போது அதற்கான வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்யாதது ஏன்? இதுபோன்ற ரெயில்களில் பயணிகளிடம் இருந்து கருத்து கேட்க வேண்டும். குறை-நிறைகளை பதிவு செய்யும் வசதி இருந்தால் தான் அதனை சரி செய்ய முடியும்.