அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய சங் பரிவார கும்பல்- டாக்டர் ஷர்மிளா பகீர் குற்றச்சாட்டு

சென்னை:
மாலை மலர் இணையதளத்திற்கு டாக்டர் ஷர்மிளா அளித்த சிறப்பு பேட்டியில், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:-
பீப் (மாட்டுக்கறி) சாப்பிடுவது போன்று வெளியிட்ட வீடியோவானது, நாம் சாப்பிடுகிறோம் என்பதை தாண்டி பீப்பில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள், பீப்பில் இருக்கும் அரசியல் குறித்து புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. 
நாட்டில் உள்ள பெரும்பாலான விளிம்புநிலை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரே ஆரோக்கியமான புரதம் ‘பீப்’தான். ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்வதற்கு பீப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இதை அரசியலாக்கி பீப் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் சிலர். என்னதான் பீப் சாப்பிடக்கூடாது என்று சொன்னாலும் மாட்டிறைச்சி ஏற்றுமதி என்பது அதிகமாகவே உள்ளது. அதுவும் உயர் வகுப்பினர் என்று சொல்லக்கூடியவர்கள்தான் அதிக அளவில் அதை ஏற்றுமதி செய்கிறார்கள். 
வணிகரீதியாக இருந்தால் எதுவென்றாலும் ஓகே, ஆனால் மனிதனின் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று வரும்போது, இதையெல்லாம் செய்யக்கூடாது என்று மற்றவர்களுக்கு கண்டிஷன் போடுவது அபத்தமான விஷயம்.
ஒரு உணவை சாப்பிடுவதும் சாப்பிடாததும் தனிமனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். அதில் உங்களின் கொள்கைக்காகவும்,  உங்களுடைய மதரீதியான காரணங்களுக்காகவும், ஒரு  குறிப்பிட்ட பிரிவினரிடம் இதை சாப்பிடக்கூடாது என்று உத்தரவு போடுவது அபத்தம். 
‘இதையெல்லாம் இவர்கள் பேசுவார்கள், இவர்களுக்கென்று வந்தால் செய்வார்களா?’ என நிறையபேர் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். அதற்கு அந்த காணொலி பயனுள்ளதாக இருந்தது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சங் பரிவார கும்பல், குறிப்பாக வலதுசாரி சிந்தனை மேலோங்கியிருக்கும் நபர்கள், வலதுசாரி ஆதரவாளர்கள், நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊடுருவிவிட்டார்கள். அதனால்தான் திடீர் திடீரென பிரச்சனைக்குரிய விஷயங்கள் நடக்கின்றன. உதாரணமாக, கள்ளக்குறிச்சியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத முடியாது என ஆசிரியர் கூறியிருக்கிறார். இதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்று சொல்வதா? அல்லது அரசு உத்தரவின்பேரில் அப்படி நடந்ததா? என்றால் இல்லை. அந்த பிரச்சனை நடந்தபிறகு அரசு நடவடிக்கை எடுத்தது. ஆக, ஒரு சிலர் தங்களின் சிந்தனைகளை மக்களிடம் திணிக்கும் முயற்சியில், தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
பிரியாணி திருவிழாவாக இருக்கட்டும் அல்லது பட்டினப் பிரவேசம் திருவிழாவாக இருக்கட்டும், அரசுக்கு என ஒரு கொள்கை இருக்கிறது, கட்சிக்கு என ஒரு கொள்கை இருக்கிறது. சமூக நீதியை நிலைநாட்டவேண்டும், மாநில உரிமையை நிலைநாட்டவேண்டும் என அரசுக்கு கொள்கை இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் கொள்கைசார்ந்த முடிவுகளை, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுக்க முடியாது. மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். 
உதாரணமாக, பட்டினப் பிரவேசம் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், அது தேவையா? என மக்கள் மன்றத்தில் வைத்தால், பெரும்பாலான மக்கள் ‘தேவையில்லை’ என்று கூறியிருப்பார்கள். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தூக்குவது தேவையில்லை என்று சொல்லியிருப்பார்கள். 
இதுபோன்று மக்கள் மன்றத்தில் கருத்து கேட்டறிந்து, அதன்பிறகு கொள்கை சார்ந்த முடிவை மேற்கொள்ளும்போது பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பாது. 
ஆதீனங்களை அழைத்து முதல்வர் பேசினார். இதை முதலிலேயே செய்திருந்தால் இவ்வளவு பெரிய விஷயங்கள் வந்திருக்காது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தூக்குவது உடன்பாடில்லை, நிறையபேர் இதை கைவிட்டுவிட்டார்கள். நீங்களும் இதை கைவிட்டுவிட்டு வழக்கம்போல் மற்ற விஷயங்களை பண்ணுங்கன்னு, சொல்லியிருந்தால் ஆதீனங்களும் செவிசாய்த்திருப்பார்கள். வலதுசாரிகள் நடுவில் புகுந்திருக்கமாட்டார்கள். ஏதாவது குழப்பம் ஏற்படும்போதுதான் இவர்கள் புகுந்து, தங்களுக்கு எப்படி சாதகமாக மாற்றலாம் என்று நினைப்பார்கள். 
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.