புதுடெல்லி: “தம் முன்னோர்களான முகலாயர்கள் செய்த தவறுகளை இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று புரியின் ஜெகத்குரு சங்கராச்சாரியர் சுவாமி நிஷ்சாலாணந்த் சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, மதுரா, ஆக்ரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளின் மசூதிகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளன. இதன் மீது இந்துத்துவாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வாரணாசியின் அஸ்ஸி மட்டத்தில் உள்ள இந்து ராஷ்டிரா அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய அழைப்பாளராக புரியின் ஜெகத்குரு சங்கராச்சாரியர் சுவாமி நிஷ்சாலாணந்த் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின் நேற்று சுவாமி நிஷ்சாலாணந்த் செய்தியாளர்களிடம் கூறியது: “நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். கடந்த காலங்களில் எங்கள் மீது நடைபெற்ற மனித உரிமை மீறல்களை இப்போது நிரூபிக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது.
தம் முன்னோர்களான முகலாயர்கள் செய்த தவறுகளை முன் உதாரணமான இஸ்லாமியர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. தம் முன்னோர்கள் செய்த தவறுகளை உணர்ந்து ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் இஸ்லாமியர்களுக்கு அவசியம்.
கியான்வாபி மசூதியில் கிடைத்தது சிவலிங்கம்தான் என்பதில் சனாதர்மத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. அதேபோல், தாஜ்மகாலும் மெக்கேஷ்வர் மஹாதேவ் கோயிலாகத்தான் இருந்தது” எனத் தெரிவித்தார்.
இதுபோன்ற விவாகரங்களை அலசுவது உள்ளிட்டக் காரணங்களுக்காக சங்காராச்சாரியர்கள் மற்றும் மடாதிபதிகள் ஆகியோரின் மாநாடு விரைவில் வாரணாசியில் நடைபெற உள்ளது. இதை சுவாமி சிஷ்சாலாணந்த் சரஸ்வதி முன்னிறுந்து நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.