புதுச்சேரி: ஊழல் முறைகேடு செய்யவே புதிய மது தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி வழங்க உள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்று நடத்தி வந்த அந்தப்பத்திரிகைக்கு ரூ.90 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்தக்கடனை அடைக்க காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. அந்த விவகாரத்தில், தவறான பணப்பரிமாற்றம் நடந்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது அமலாக்கத்துறை விசாரணையும் நடத்தி, தள்ளுபடியும் செய்யப்பட்டது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்த வழக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கோடு மத்திய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. எதிர்கட்சித் தலைவர்களை அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வரும் மத்திய பாஜக அரசு, அந்த வழியில் காங்கிரஸ் தலைவர்களையும் மிரட்டிப் பார்க்கிறது. இந்த மிரட்டலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்.
ஆதாரமில்லாத வழக்கை மீண்டும் புதுப்பித்து ஏவுவது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த பழிவாங்கும் அரசியல் மீண்டும் பாஜகவினரையும் தாக்கும். புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தப்போவதாக இங்குள்ள கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கல்வியை சீர்குலைத்து, இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்த உள்ளதை ஏற்க முடியாது.
புதுச்சேரியில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆளுநர் அனுமதிக்காமல் அது தடைபட்டது. இடையே வந்த என்.ஆர்.காங்கிரஸ் அதனை செயல்படுத்தவில்லை. தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களுக்கு சமூக நீதி கிடைத்திட சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும். புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கு, முதல்வர் ரங்கசாமி கடிதம் அளித்து ஒப்புதல் வழங்கிவிட்டார். மின்துறை தனியார்மயம் குறித்து, கருத்து கேட்டு முடிவெடுப்பதாக உறுதியளித்த அவர், மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்துவிட்டார்.
இதனைக் கண்டித்து, பல கட்டப்போராட்டங்களை எதிர்கட்சிகள் நடத்த உள்ளன. புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பலவீனமடைந்துவிட்டது. புதுச்சேரியில் ஏற்கனவே ஏராளமான மதுக்கடைகளும், 6 மது உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்ள நிலையில், புதிய மது தொழிற்சாலை தொடங்க அவசியமில்லை. அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு செய்யவே இந்த அரசு அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிகிறது.
புதிய மது ஆலை திறந்தால், சுண்ணாம்பாற்றில் தண்ணீருக்கு பதில் சாராயம் தான் ஓடும். சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால், அதனை நிறுத்த வேண்டும். புதுச்சேரி கலால் துறையில் ஊழல் முறைகேடு தொடர்ந்துள்ளது. பிரதமர் மோடி ஊழல் இல்லாத அரசு என்று பொய் சொல்கிறார். புதுச்சேரியில் நடைபெறும் ஊழலையும் அவர் கண்டுகொள்ளவில்லை” என்றார்.
வைத்திலிங்கம் எம்.பி கூறும்போது, ”பாஜக அரசு தோல்வி பயத்தால் எதிர்கட்சிகளை மிரட்டி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் சர்வாதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்கிறது. தற்போது காங்கிரஸ் வலுவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸை முடக்கவே பாஜக இதுபோன்ற வழக்கு போடுகிறது.
தாங்கள் செய்த திட்டங்களை எடுத்துக்கூறி, மக்களிடம் பிரச்சாரம் செய்தால், வாக்கு வாங்கலாம். ஆனால் அதனைவிடுத்து மலிவான பழிவாங்கும் செயலை பாஜக செய்யக்கூடாது. பாஜக ஆட்சிக்கு பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் ஒன்றுமே செய்வில்லை” என்று வைத்திலிங்கம் தெரிவித்தார். பேட்டியின்போது காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.