நீச்சல் தெரியாமல் தெர்மாகோல் மூலம் கல்குவாரியில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவசாமிநாதன் (57), என்பவரின் மகன் தினேஷ் தேவா (23). இவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்கு வந்துள்ளார்.
அப்போது நீச்சல் தெரியாத தினேஷ் தேவா தெர்மாகோல் உதவியுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், நீரில் மூழ்கினார். இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கிய தினேஷ் தேவாவை தேடும் பனியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டு இன்று காலை மீண்டும் தினேஷ் தேவாவை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் தினேஷ் தேவா உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய மாங்காடு போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM