தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வலியுறுத்தியிருக்கிறார். ஆளுநருடனான இந்தச் சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநர் ரவி உடனான முதல்வர் ஸ்டாலினின் இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை 1983, தமிழ்நாடு சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழ்நாடு மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரைக் கேட்டுக்கொள்கிறேன்” என முதல்வர் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், நீட் விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியற்காக ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.