வருகிறது உணவு நெருக்கடி?- உக்ரைனில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சி: தவிப்பில் உலக நாடுகள்

மாஸ்கோ: ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மே மாதத்தில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னணி தானிய ஏற்றுமதி நாடான உக்ரைனில் சோளம், சூரிய காந்தி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மலேசியோ, இந்தோனேஷியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.

சமையல் எண்ணெயை தொடர்ந்து உலக அளவில் கோதுமைக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகில் கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்தது உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கோதுமை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யா- உக்ரைன் இரண்டு நாடுகளும் போரில் சிக்கியுள்ளன. இதனால் அந்த நாடுகளில் இருந்து வழக்கமாக கோதுமை வாங்கும் நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் சாகுபடி பாதிப்பு

கோதுமை சாகுபடியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றான உக்ரைனில் போர் காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் கடந்த மே மாதத்தில் மட்டும் கோதுமை உற்பத்தி 40% சரிவடைந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு 33 மில்லியன் டன்கள் அளவிற்கு உக்ரைனில் கோதுமை உற்பத்தி நடைபெற்றுள்ளது. ஆனால் 2022-ம் ஆண்டு மே மாத்தில் 19 மில்லியன் டன்கள் மட்டுமே கோதுமை உற்பத்தியாகியுள்ளது. உக்ரைனில் கடுமையான போர் நடந்து வருவதால் கோதுமை உற்பத்தியில் அந்நாடு கவனம் செலுத்தவில்லை.

இதுமட்டுமின்றி சோளம் மற்றும் சூரிய காந்தி உற்பத்தியும் கடந்த மே மாதத்தில் சரிவடைந்துள்ளது. 2021-ம் ஆண்டில் 37.6 மில்லியன் டன்களாக இருந்த சோளம் உற்பத்தி 2022-ம் ஆண்டில் 26 மில்லியன் டன்களாக சரிவடைந்துள்ளது.

முக்கிய சமையல் எண்ணெயான சூரிய காந்தி எண்ணெய் உற்பத்திக்கு பயன்படும் சூரிய காந்தி உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளது. உக்ரைனில் 2021-ம் ஆண்டு மே மாதத்தில் 16.9 மில்லியன் டன்கள் அளவிற்கு சூரிய காந்தி சாகுபடி செய்யப்பட்டு அறுவை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2022-ம் ஆண்டு மே மாதத்தில் இது 9 மில்லியன் டன்களாக வீழ்ச்சி கண்டுள்ளது.

15 நாடுகள்; 50%

உலகில் கோதுமை ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஏற்றுமதியில் முப்பது சதவிகிதம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது.

ரஷ்யாவின் கோதுமையில் பாதியை எகிப்து, துருக்கி மற்றும் வங்கதேசம் வாங்குகின்றன. உக்ரைனில் இருந்து எகிப்து, இந்தோனசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி, துனிசியா ஆகிய நாடுகள் கோதுமை வாங்குகின்றன.

உக்ரைன், ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் கோதுமையை நம்பியே 25 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. அந்த நாடுகள் தங்களின் மொத்த கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இறக்குமதி செய்து வருகின்றன. அதேபோல 15 நாடுகள் தங்கள் 50 சதவீதம் கோதுமை தேவையில், உக்ரைன், ரஷ்யாவில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளன.

இதனால் இந்த நாடுகளில் பெரும்பாலானவை மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதுமட்டுமே உக்ரைனில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பாதிப்பால் சோளம், சூரிய காந்தி போன்றவற்றுக்கும் உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

இதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீது மற்ற நாடுகள், உணவுப் பொருட்களின் வர்த்தகத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிடம் இருந்து தானியங்கள் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

இதனால் உலக அளவில் வரும் மாதங்களில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இது உணவு நெருக்கடிக்கு வழி வகுக்கும் எனத் தெரிகிறது.

குறிப்பாக அரிசி அல்லாமல் கோதுமையை முக்கிய உணவு தானியமாக பயன்படுத்தும் மக்களை கொண்ட நாடுகளில் அதிகமான நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகஅளவில் ஆப்ரிக்க நாடுகளும், அதனைத் தொடர்ந்து ஆசிய நாடுகளும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.