சின்ன சின்ன வீடியோக்களை பதிவு செய்யும் டிக் டாக் செயலி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்டது.
டிக்டாக் செயலிக்கு பதிலாக பல மாற்று செயலிகள் இந்தியாவில் தோன்றினாலும் டிக்டாக் அளவுக்கு இன்னும் எந்த செயலியும் பிரபலமாகவில்லை.
இந்த நிலையில் வேறு பெயரில் வேறு நிறுவனத்தின் கூட்டணியில் டிக்டாக் மீண்டும் இந்தியாவுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலான் மஸ்க் டூப்புக்கு நடந்த கொடுமை பார்த்தீங்களா.. டிக்டாக்-ல் புலம்பல்..!
டிக்டாக்
சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி இந்தியாவின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்டது. இந்திய மற்றும் சீன நாட்டின் இடையிலான எல்லைப் பிரச்சனை மற்றும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடைசெய்யப்பட்டது. அதில் ஒன்று டிக்டாக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும் தற்போது மீண்டும் ஒரு சில நாடுகளில் டிக்டாக் நுழைந்துவிட்டது. அதே போல் இந்தியாவிலும் நுழைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
மீண்டும் டிக்டாக்?
இந்த நிலையில் மீண்டும் இந்தியாவில் தனது சேவைகளை தொடங்க டிக்டாக் திட்டமிட்டு உள்ளதாகவும், முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பைட் டான்ஸ்
இதுகுறித்து கிடைத்த தகவலின்படி டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் என்ற நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நுழைய விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நேரடியாக இந்தியாவில் நுழையாமல் உள்நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இந்தியாவில் தனது சேவைகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஹிராநந்தனி குழுமம்
மும்பையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹிராநந்தனி குழுமத்துடன் பைட் டான்ஸ் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் டிக்டாக் வேறு பெயரில் இந்தியாவில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட்
ஹிராநந்தனி நிறுவனம் ஏற்கனவே பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப சார்ந்த நுகர்வோர் தளமான Tez பிளாட்பார்மை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை, மும்பை உள்பட பல நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் 3500 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்யப் போவதாகவும் அறிவிப்பு செய்துள்ளது.
அனுமதி
இந்த நிலையில் ஹிராநந்தனி ம்ற்றும் பைட் டான்ஸ் இணைந்து மீண்டும் டிக்டாக் செயலியை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் இரு நிறுவனங்களும் எந்த ஒரு தகவலையும் தற்போது வெளியிடவில்லை. ஆனால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் இதுகுறித்து இந்திய அரசாங்கத்திடம் அனுமதி கேட்பது குறித்த தகவல்களும் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
மற்ற செயலிகள்
டிக்டாக் தடை காரணமாக இந்தியாவில் தொடங்கபட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் சார்ட், ஷேர் சாட், ஜோஷ் ஆகிய செயலிகள் தற்போது ஓரளவுக்கு பிரபலமாக இருந்தாலும், டிக் டாக் மீண்டும் வந்தால் மேற்கண்ட செயலிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்டாக் அளவுக்கு மேற்கண்ட எந்த செயலியும் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை என்பதால் டிக்டாக் மீண்டும் வந்தால் தனது பழைய வாடிக்கையாளர்களை ஒரு சில நாட்களில் ஈர்த்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TikTok is planning to relaunch in India through local partnership?
TikTok is planning to relaunch in India through local partnership? | வேறு பெயரில் மீண்டும் இந்தியாவிற்குள் வருகிறதா டிக்டக்? பேச்சுவார்த்தை ஆரம்பம் என தகவல்!