ரிப்பன் மாளிகையில் நிரந்தர மின் விளக்கு அலங்காரம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை

ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மின்விளக்கு அலங்காரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

சுமார் 109 ஆண்டு பழமையான ரிப்பன் மாளிகை சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் ஆகும்.  ரிப்பன் மாளிகையில், சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின்போது, தேசியக் கொடியைக் குறிக்கும் வகையிலான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மேலும், மார்பக புற்றுநோய் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

இவ்வாறு ரிப்பன் மாளிகையை விளக்குகளால் அலங்கரிக்கும் போதெல்லாம், அவற்றைப் பார்வையிடப் பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் அனைவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரிப்பன் மாளிகையின் அழகை ரசித்துக் கொண்டே செல்வர்.

ரிப்பன் மாளிகையில் 1.81 கோடி ரூபாய் செலவில் நிரந்தரமாக வண்ண விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இவ்வாறு அமைக்கப்பட்ட அலங்கார மின் விளக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இனி ஒவ்வொரு சர்வதேச தினத்திற்கு ஏற்ப, அந்நிறத்தைக் குறிக்கும் வகையில் ரிப்பன் மாளிகை மின் விளக்குகள் ஒளியூட்டப்படும்.

தவிர ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை மற்றும் பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளை மற்றும் பச்சை நிறத்திலும் மின் விளக்குகள் அலங்கரிக்கப்படும்.

இவ்விளக்குகள் தினசரி மாலை 6:30 முதல் 11:00 மணி வரை ஒளியூட்டப்படும்.   இதனால் தினசரி 800 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தவிர, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒளியூட்டப்படும் நேரம் அதிகரிக்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.