கொல்கத்தா: சரியான நேரத்தில் CPR சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் பாடகர் கேகே காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், கேகேவின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறும்போது, “கேகேவின் மரணத்திற்கு மாராடைப்புத்தான் காரணமாகியுள்ளது. பாடகருக்கு இதயக் குழாய்களில் அடைப்புகள் இருந்துள்ளன. குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் CPR சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நுரையீரலில் அதிகப்படியான திரவம் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. நிச்சயம் கேகேவிற்கு வலிக்கான அறிகுறிகள் வந்திருக்கும். ஆனால் அவர் அதனை வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் என்று நினைத்து இருக்கலாம். பிரேதப் பரிசோதனையில், கேகே அதிக அளவு ஆன்டாசிட்ஸ் (antacids- வாயு தொல்லைக்காக சாப்பிடும் மாத்திரை) உட்கொண்டது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கேகே அதிக அளவு ஆன்டாசிட் எடுத்துக் கொண்டதும், தனது மனைவியிடம் கை மற்றும் தோள்பட்டைகள் வலி குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்” என்று போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.