புதுடெல்லி: இந்தியா முழுவதும் ‘பெண்கள் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களால் ஒரே மாதத்தில் 150 சிறுமிகளும் பெண்களும் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: இந்திய ரயில்வேயில் மகளிர் எப்போதும் முக்கியமானவர்கள். இந்திய ரயில்வேயில் பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு. “பெண்கள் பாதுகாப்பு இயக்கம்” 2022 மே 3-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்தக் காலக்கட்டத்தில், இந்திய ரயில்களில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்த 7,000-க்கும் மேற்பட்டவர்களை, ரயில்வே பாதுகாப்புப்படையின் பெண் காவலர்கள் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட 150 சிறுமிகள், பெண்களை ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர்கள் மீட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதற்காக “மேரே சஹேலி” என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 223 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய பயிற்சி பெற்ற பெண் அதிகாரிகளை கொண்ட 283 பேர் குழுவினர் ரயில்வே பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருகின்றனர்.
இந்திய ரயில்வே முழுவதும், நாளொன்றுக்கு 1,125 ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.