மதுரை: மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியின்போது, சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பியதாக தி.க.வினர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில், செஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு நடந்தது. இதையொட்டி, மதுரை காளவாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணியை சு. வெங்கடேசன் எம்பி தொடங்கி வைத்தார்.
பழங்காநத்தம் பகுதியை சென்றடைந்து, அங்கு நடந்த மாநாட்டில் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.
இந்நிலையில், செஞ்சட்டை பேரணியின்போது, அதில் சென்றவர்கள் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்து கோஷங்கள் எழுப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் வீடியோ வைரலானதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது குறித்து இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் மதுரை எஸ்எஸ். காலனி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஓரிரு அமைப்பினர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக கோஷமிடுதல் உட்பட மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கினறனர்.