Thanjavur collector provides community certificate to Irula community people: உரிய ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான உரிய இட ஒதுக்கீடு மற்றும் இதர சலுகைகளைப் பெற முடியாமல் இத்தனை ஆண்டு காலம் தவித்து வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒன்னாம்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்களின் துயரைத் துடைக்கும் வகையில் அவ்வின குழந்தைகள் 10 பேருக்கு அவர்களது வீட்டிற்கே நேரில் சென்று ஜாதிச் சான்றிதழ் வழங்கி அசத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
பாபநாசம் வட்டம் மெலட்டூரை அடுத்துள்ள ஒன்னாம் சேத்தி கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த 23 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து இங்கே வந்து கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். ஆயினும், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இவ்வின மக்கள் இத்தனை ஆண்டுகளாக பல முறை முறையிட்டும் இவர்களுக்கான உரிய ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் இதுபற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். உரிய ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கான அரசின் சலுகைகளைப் பெற முடியாமல் தங்களது குழந்தைகள் தவிப்பதாக அம் மனுவில் கூறியிருந்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று, ஒரு வார காலத்திற்குள் உரிய விசாரணை மேற்கொண்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்குள் ஜாதிச் சான்றிதழ் வழங்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பாபநாசம் வட்ட வருவாய்த் துறையினர் துரிதமாக செயல்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் இவர்களின் நெருங்கிய, ரத்த சம்பந்தம் உள்ள உறவினர்களுக்கு அம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளால் இருளர் இன மக்களுக்கான ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அதனடிப்படையில், ஒன்னாம்சேத்தி கிராமத்தில் வசிக்கும் இவ்வின மக்களுக்கு இருளர் இன மக்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக அக் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லும் குழந்தைகள் 10 பேருக்கு இன்று ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அந்த சான்றிதழ்களை அந்தக் குழந்தைகளின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். அதனால் அந்தக் குழந்தைகளின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படியுங்கள்: உயிர்பலி வாங்கத் துடிக்கும் போலீஸ் காலனி மேல்நிலை தொட்டி: அதிகாரிகள் கவனிப்பார்களா?
“இவர்கள் அனைவரும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து இங்கே வந்து செட்டிலாகிவிட்டனர். கோனியக்குறிச்சி சாலைத் தெருவில் வசித்து வருகின்றனர். தற்போது முதல் கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 10 குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர, இன்னும் 6 குழந்தைகளுக்கு விரைவில் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதற்கான ப்ராசஸ் தற்போது நடைபெற்று வருகிறது,” என்கிறார் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் வி.லதா.
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இந்த 23 குடும்பங்களுக்கும் விரைவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டுமனைப் பட்டா வழங்கிய பின்னர் இவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்