பாட்னா: பிஹார் மாநிலத்தில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு. வரும் 2023 பிப்ரவரிக்குள் பணியை முடிக்க அரசு திட்டம்.
அந்த மாநிலத்தில் புதன்கிழமை அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஏகமனதாக அனைத்து கட்சிகளும் இணைந்து முடிவு செய்தன. இந்த பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில சட்டப்பேரவையில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற தீர்மானம் இரண்டு முறை நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் அந்த மாநிலத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்தது. அதே நேரத்தில் மாநில அரசு தங்கள் சொந்த முயற்சியில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டம் முடிந்த 24 மணி நேரத்தில் இந்த பணிக்காக 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது அந்த மாநில அமைச்சரவை. இதனை அந்த மாநில தலைமை செயலர் உறுதி செய்துள்ளார்.