புதிய கட்டடத்தில் பார்லி., குளிர்கால தொடர் : மத்திய அமைச்சர் திட்டவட்டம்| Dinamalar

”இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தான் நடக்கும்,” என, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திட்டவட்டமாக தெரிவித்தார்.

டில்லியின் விஜய் சவுக் முதல் இந்திய கேட் வரையிலான பகுதியை மறுசீரமைப்பு செய்யும், ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு 2020 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்தின் கீழ் முக்கோண வடிவிலான புதிய பார்லிமென்ட் கட்டடம், மத்திய தலைமை செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய இல்லம் ஆகியவற்றுடன் விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதை சீரமைப்பு ஆகியவை நடந்து வருகிறது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சீரமைப்பு பணிகளை நேற்று பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழா பேரணி புதிய ராஜபாதையில் நடத்தப்படும். அதே போல நவம்பரில் நடக்கவுள்ள பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் புதிய பார்லி., வளாகத்தில் நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

‘புதிய பார்லி., கட்டடத்தின் ஒரு பகுதி அரசியலமைப்பு தினமான நவ., 26ல் செயல்பாட்டுக்கு வரும்’ என, அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ராஜபாதையின் சீரமைப்பு பணிகள் 10 – 15 நாட்களில் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 11ல் துவங்கி ஆக., 12 வரை நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய பார்லி., கட்டடத்தில் நடக்கவுள்ள கடைசி கூட்டம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடராக கருதப்படுகிறது. இந்த கூட்டத் தொடரின் மத்தியில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்கவுள்ளது.
– புதுடில்லி நிருபர் –

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.