அடிப்படையில் நான் டெல்டாகாரன்… டெல்டா மாவட்ட பயணம் பற்றி முதலமைச்சர் கடிதம்

சென்னை:

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
எழுதி உள்ள கடிதம் வருமாறு:-

மே 30-ந் தேதி காலையில், நான் என் குடும்பத்தினருடன் எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியின் விழாவில் பங்கேற்று, பெண் கல்விக்காக நமது அரசு எடுத்து வரும் முயற்சிகளை விளக்கிச் சொல்லி, சுருக்கமாக உரை நிகழ்த்தினேன்.

பின்னர் விரைவாக விமான நிலையத்திற்கு வந்து, திருச்சிக்குப் பயணித்தேன். திருச்சியில் கழகத்தினரின் வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தாலும், மக்கள்நலன் அதைவிட மனதில் மிகுதியாக மேலோங்கி இருந்தது.

உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தி, பாதாள சாக்கடை, சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் நலன்பெற ஆவன செய்ய அறிவுறுத்திவிட்டுப் புறப்பட்டேன்.

பயண வழியில் முதலில் தஞ்சாவூரில் வரவேற்பு அளித்தனர். அப்போது, வா.வீரசேகரன் என்ற கழகத் தோழர் என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அது என்னவென்று பார்த்தபோதுதான், அது வெறும் காகிதமல்ல, அரிய ஆவணம் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், திருவாரூர் கமலாம்பிகா நகரக் கூட்டுறவுச் சங்கத்தில் நமது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் தந்தையும் எனது தாத்தாவுமான முத்துவேலர் தனக்கிருந்த பங்குகளை, தன் வயதுமூப்பின் காரணமாக, நம் தலைவருக்கு மாற்றித் தரக்கோரிய ஆவணம் அது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக 1946-ல், கூட்டுறவு வங்கியின் ஆவணத்தில் தாத்தா முத்துவேலரின் கையெழுத்தையும் தலைவரின் ஆங்கில எழுத்துகளில் அமைந்த கையெழுத்தையும் பார்த்தபோது பரவசமாக இருந்தது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பீமனோடை வடிகாலைத் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டேன்.

இரவு 7 மணி மன்னார்குடி வந்தபோது, தஞ்சை மாவட்டக் கழகத் தளகர்த்தராக விளங்கிய மன்னை வீட்டுக்குச் சென்று, கொள்கைப் பற்றுடன் திகழும் அவர்களின் குடும்பத்தாருடன் தேநீர் குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தேன். வேளாங்கண்ணி சென்றடையும் வரையில், குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரையாவது பார்த்திருப்பேன்.

அடுத்த நாள் (மே 31) காலையில் 8 மணிக்கெல்லாம் நாகை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளையும், வேளாண்துறை சார்பில் உழவர்களுக்கு வாடகைக்குத் தரப்படும் இயந்திரங்களைப் பார்வையிட்டோம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரஷ்யா சென்று மருத்துவம் படித்துச் சாதித்துள்ள விஜயலட்சுமியையும்; கணவரை இழந்த நிலையில் மனந்தளராமல் மீன்களைச் சுத்தம் செய்து தன் மகளை மருத்துவராக்கிய அவரது தாயார் ரமணியை வாழ்த்தி முந்தைய நாள் பதிவிட்டிருந்தேன். திருக்கடையூரில் தாயையும் மகளையும் நேரில் சந்தித்து எனது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன்.

அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்குப் பயணம். நல்லாடை, பேரளம் ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டேன். பேரளம் ரெயில்வே கிராசிங்கைக் கடக்கும்போது என் சிறு வயது நினைவுகள் வட்டமிட்டன. பள்ளிக்கூட நாட்களில் அம்மாவின் ஊருக்கு வரும்போது, பூந்தோட்டம் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கித்தான் மாட்டு வண்டியில் செல்வோம். தாய் பிறந்த மண்ணுக்கு வரும்போது என் தாயார் தயாளு அம்மாள் மனதில் எழும் மகிழ்ச்சியும் உறவினர்கள் காட்டும் அன்பும் நெஞ்சை விட்டு அகலாதவை.

திருவாரூரை நெருங்க நெருங்க வரவேற்பும் அதிகமானது. தமிழ் காக்கத் தளராது போராடிய நம் தலைவர் முதன்முதலில் தமிழ்க்கொடி ஏந்திப் போராடிய மண் அல்லவா!  “அப்பா போலவே நீங்களும் மக்களைப் பார்த்ததும் காரை நிறுத்தி, நலம் விசாரிக்கிறீங்க” என்று மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருவாரூரிலிருந்து திருச்சி விமான நிலை யத்திற்கு வந்தபோது அங்கும் மக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வந்திருந்தனர். முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தால் கவனிக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற மக்களின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில்தான், காவிரிப் படுகை மாவட்டங்களில் ஆய்வுப் பணியை முடித்துத் திரும்பிய வேகத்தில், அடுத்த நாளே தலைமைச் செயலகத்தில் துறைவாரியான இருநாள் ஆய்வுப் பணிகள் வேகம் பெற்றன.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ‘யாதும் ஊரே’ என்ற பொறுப்புணர்வுடன் அனைத்து ஊர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டாலும், காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியைத் தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்படுகிறது. அதிலும் திருவாரூர் என்கிறபோது தலைவர் கலைஞரின் காலடிச் சுவடுகளைக் காண்பது போன்ற உணர்வில் மெய்சிலிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. அது, நம் ஆருயிர்த் தலைவர் போல என்றும் ஓயாது உழைக்க வேண்டும் என்ற தளராத ஊக்கத்தைத் தருகிறது.

காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாயும் இடங்களுக்குச் செல்லும்போது அதுபோன்ற உணர்வுதான் எனக்கும். என்ன இருந்தாலும் அடிப்படையில் நான் டெல்டாகாரனாயிற்றே!

இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.