தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த மாணவி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 338-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரதான தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் 2 தினங்களுக்கு முன் வெளியானது.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த மாணவி ஏஞ்சலின் ரெனீட்டா(23) அகில இந்திய அளவில் 338-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை ரவி ஆரம்பக் கல்வி மட்டுமே படித்து, கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தாய் விக்டோரியா 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது சகோதரர் முதுநிலை பொறியியல் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மாணவி ரெனீட்டா 1-ம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்.
10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1158 மதிப்பெண்களும் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டம் படித்து, அதிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். குடிமைப் பணி தேர்வில் தனது 2-வது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஏஞ்சலின் ரெனீட்டா கூறியதாவது: எனக்கு சிறுவயது முதலே ஐஏஎஸ் ஆக வேண்டும் என ஆர்வம் இருந்தது. 2020-ல் முதன் முறையாக குடிமைப் பணி தேர்வு எழுதினேன். அப்போது கரோனா காலம் என்பதால் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. போதிய புத்தகங்களும் கிடைக்கவில்லை. அப்போதுதோல்வி அடைந்தேன். அதன்பிறகு தனியார் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பயிற்சி பெற்றேன்.
2-வது முயற்சியில் அகில இந்திய அளவில் 338-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன்.
இதையடுத்து, வரும் ஆகஸ்ட் இறுதியில் உத்தராகண்ட் மாநிலம் முசௌரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சிஅகாடமியில் பயிற்சி பெற உள்ளேன். அதன்பின் எந்த மாநிலத்தில் பணியில் சேர்ந்தாலும், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுவேன் என்றார்.