புதுடெல்லி: வருகின்ற 8ம் தேதி டெல்லியில் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 8ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியது. அதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் ஜூன் 2ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு இருப்பதால் ராகுல் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. 5ம் தேதிக்குப் பிறகு ஏதாவது ஒரு தேதியில் விசாரணை நடத்தும்படி அமலாக்கத் துறைக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். அதன்படி, வேறொரு தேதியில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சலுடன் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர்கள் அவருடைய உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், 8ம் தேதி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவதில் சோனியா உறுதியாக இருக்கிறார்,’ என தெரிவித்தார். விரைவில் குணமடைய வேண்டும்முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். கொரோனா தொற்று நோய் இன்னும் நீங்காததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.