சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார் அப்போது, நிலுவையில் உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்காக நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.
ஆனால், நீட் தேர்வு மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறி, கடந்த பிப்.1-ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதையடுத்து, பிப்.8-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, நீட் விலக்கு கோரும் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாமல் இருந்தார். கடந்த மார்ச் 15-ம் தேதி, ஆளுநரை சந்தித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினார். மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளமசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவிஅனுப்பி வைத்தார். இருப்பினும், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு குறித்த திருத்தச் சட்ட மசோதா, இந்த ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக உருவாக்கசட்ட மசோதா, பல்கலைக்கழங்களுக்கான துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையிலும், முதல்வரை வேந்தராக நியமிக்கும் வகையிலும் பல்கலைக்கழகங்களின் சட்டத்தை திருத்திய மசோதாக்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான பதவிக்காலத்தை குறைப்பது தொடர்பான மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் மீது இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அழைத்து கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இதுதவிர, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் உட்பட பல்வேறு விழாக்களில் தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர் பேசி வருகிறார். இதற்கு அதே மேடையிலும், வெளியிலும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்பு குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்காக ஆளுநருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்தச்சட்ட மசோதா, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்ட மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலை நிறுத்தும்படி ஆளுநரை முதல்வர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.