இயக்குனர் மணிரத்னம் பிறந்ததினம் இன்று..

இப்போதிருக்கும் சூழலில் ஒரு இயக்குனர் 5 ஆண்டுகள் நிலைத்து நிற்பதே பெரிய சாதனை. ஆனால் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இயக்குனர் இன்னமும் உச்சத்தில் இயங்கி வருகிறார். அதுவும் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு படங்களை தருகிறார். அவர் தான் மணிரத்னம். இன்று (ஜூன் 2ம் தேதி) அவரின் 67வது பிறந்த நாள்.

கடந்த கால் நூற்றாண்டுகளாகவே சினிமா துறையில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு வந்த இளைஞர்களின் ஒரே ரோல் மாடல் மணிரத்னம். அது 90களின் ஆரம்பத்தில் வந்த வசந்த், 2000 ஆரம்பத்தில் வந்த கவுதம் வாசுதேவ் மேனன், ஏஆர் முருகதாஸ், செல்வராகவன் ஆரம்பித்து கடந்த நான்கைந்து ஆண்டுகளில் வந்த கார்த்திக் சுப்பாராஜ், கார்த்திக் நரேன் வரை அனைவரின் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மணிரத்னத்தின் திரை வாழ்வும் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தே வந்திருக்கிறது.

இப்போது அனைவரும் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் 1980களிலேயே யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காமல் இயக்குனர் ஆனவர் தான் மணிரத்னம். எம்பிஏ படித்து விட்டு மும்பையில் கன்சல்டண்டாக வேலை பார்த்து வந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் அது போரடித்துப் போகவே, சினிமாவில் நல்ல சினிமாக்களை கொடுக்கும் நோக்கத்தில் வேலையை விட்டு விட்டு சினிமா முயற்சிகளில் இறங்கினார். அவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான், சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்புகள் அமைந்தும் அதை அவர் விரும்பவில்லை. அவர் நண்பர்களோடு இணைந்து சினிமா இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது நண்பருக்கு ஒரு கன்னட பட வாய்ப்பு அமைய அதில் சில நாட்கள் வேலை பார்த்தார்.

கதையை வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களை சந்தித்தார். யாரும் அவரின் சினிமா ரசனையோடு ஒத்துப் போகவில்லை. ஒரு வழியாக கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி என்ற படத்தை இயக்கினார். முதல் முயற்சியே கைகொடுக்காததால் மலையாளத்தில் மோகன்லால் நடிக்க, இன்னொருவர் எழுதிய கதைக்கு வெறும் இயக்குனராக மட்டும் அவரை கேட்டனர். நண்பர்கள், குடும்பத்தினர் வற்புறுத்தவே அந்த படத்தையும் இயக்கினார். அதுவும் சரியாக போகததால் அடுத்தடுத்து சில சமரசங்களை செய்து கொண்டு இரு படங்களை இயக்கினார். ஒரு கட்டத்தில் சினிமா வேலைக்கு ஆகாது என்று அவரது குடும்பத்தினர் சொல்ல, அவரது அண்ணனிடம் ஒரு படத்தை தயாரிக்க சொல்லி, அதிலும் தோல்வியடைந்தால் சினிமாவை விட்டு விடுகிறேன் என சொல்லி, மௌனராகம் படத்தை இயக்கினார் மணிரத்னம்.

மௌனராகம், படத்தில் தொடங்கியது அவரின் வெற்றி. புதுப்புது முயற்சிகளும், புதுவித கதை சொல்லலும், இளைஞர்களை மிகவும் ஈர்க்க அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அன்று தொடங்கி 20 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு வெற்றிகள், பரிசோதனை முயற்சிகள் என மாறி மாறி பயணித்த மணிரத்னம் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் என்றால் அது மிகையாகாதுதன் திரைப்படங்களின் மூலம் திரைப்படமாக்கம் என்னும் கலை குறித்தும் ஒளி அமைப்பு, ஒலிப் பயன்பாடு, நிறங்களின் முக்கியத்துவம் எனச் சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் தமிழ்த் திரையுலகுக்கு வழிகாட்டியானார் மணிரத்னம். தனக்கென்று ஒரு பிரத்யேகத் திரைமொழியை உருவாக்கி அது இன்றுவரை நீர்த்துப்போகாமல் தக்கவைத்திருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி திரையுலகிலும் இயக்குநர்கள், கலைஞர்கள் பலர் அவரை தன்னுடைய மானசீக குருவாகப் போற்றுகின்றனர். ரசிகர் பரப்பிலும் இத்தனை ஆண்டுகளில் அவருடைய மதிப்பு ஏறிக்கொண்டே இருக்கிறது. 80ஸ் கிட்ஸ், 90ஸ், கிட்ஸ், 2கே கிட்ஸ் எனத் தலைமுறை தலைமுறையாக இளைஞர்கள் அவருடைய திரைப்படங்களின் வெளியீட்டு நாளன்று திரையரங்க இருக்கைகளை நிறைக்கிறார்கள். உண்மையில் அவருடைய பழைய திரைப்படங்களைத் தேடிப் பார்த்து இன்னும் இன்னும் பரவசம் அடைகிறார்கள்.
இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.