இலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி: கோத்தபய ராஜபக்சே

கொழும்பு :

பொருளாதார நெருக்கடியால் தத்தளித்து வரும் இலங்கையில் விவசாயமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை விவசாயத்துக்காக வேதி உரங்களின் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு அரசு தடை விதித்ததால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் நெல், தேயிலை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் 50 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதனால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியும், விளைச்சல் இழப்பும் நீடித்தால் ஆகஸ்டு மாதத்தில் நாடு மிகப்பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் என வேளாண் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து விளைச்சலை அதிகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக மே-ஆகஸ்டு கால கட்டத்தில் நடைபெறும் யாலா பருவ சாகுபடிக்கு பெரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக இந்தியாவிடம் இருந்து உரம் கேட்டு இருக்கிறது. இந்தியா வழங்கி வரும் கடன் எல்லைக்கு உட்பட்டு இந்த உர கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இலங்கையின் இந்த கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்த்து உள்ளது. இலங்கை விவசாயிகளின் பயிரை பாதுகாத்து, நாடு உணவு பற்றாக்குறையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியா முடிவு செய்திருக்கிறது. இதை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், நேற்று உறுதி செய்துள்ளார்.

நீர்ப்பாசன அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய அவர், இலங்கையின் அடுத்த சாகுபடி பருவத்துக்கு இந்தியா உரம் வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்தியா வழங்கும் இந்த உரம் கொழும்பை அடைந்தவுடன், 20 நாட்களுக்குள் நாடு முழுவதும் வினியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உரம் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் டன் யூரியா வழங்கப்படும் என இந்தியா கடந்த மாதம் அறிவித்து இருந்தது. இந்தியாவில் உரம் ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதும், இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உரம் வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக இலங்கை தூதரகம் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.