கலிஃபோர்னியா: சமூக வலைதளங்களில் வெறுப்பு பதிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக்கில் 53,000 வெறுப்பு பதிவுகள் கண்டறியப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 38% அதிகம். மார்ச்சில் பேஸ்புக்கில் 38,600 வெறுப்புப் பதிவுகள் கண்டறியப்பட்டன.
அதேபோல் இன்ஸ்டாகிராமில் வன்முறைப் பதிவுகளின் எண்ணிக்கை 86% அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் 41,300 வன்முறை பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில் ஏப்ரலில் அது 77,000 ஆக உயர்ந்துள்ளது என்று மெட்டா தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான பதிவுகள், பயனாளர்கள் புகார் அளிப்பதற்கு முன்பாகவே கண்டறியப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வெறுப்புப் பதிவுகள் அதிகம் புழங்கும் சமூக வலைதளங்களாக உள்ளன. வெறுப்புப் பதிவுகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.