குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானையை விரட்ட முயலும் தெரு நாய்களின் செய்கைகள் இணையத்தில் வேகமாக பரவிவருகின்றன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ளது பாகுபலி என்ற காட்டு யானை. சுமார் ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் இதன் நடமாட்டம், ஊருக்குள் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த காட்டு யானை மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள சமயபுரம், ஓடந்துறை, தாசம்பாளையம் என மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே தொடர்ச்சியாக இரவு நேரங்களில் நடமாடி வருகிறது. இங்குள்ள விவசாய விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களையும் நாசப்படுத்தி வருகிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் முகாமிட்டுள்ள இந்த பாகுபலி யானையை, கும்கி யானைகளை பயன்படுத்தி விரட்டவும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயன்ற வனத்தறையினர் பல முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவையாவும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள சமயபுரம் என்னுமிடத்தில் இரவு நேரங்களில் சாலையை கடந்து ஊருக்குள் நுழைவது யானையின் வாடிக்கையாகி வருகிறது.
இதையும் படிங்க… ‘ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?’- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
ஒற்றையாக உலா வரும் பாகுபலி தன்னை விரட்ட முற்படும் வனத்துறையினரை அச்சுறுத்தி விட்டு அருகில் உள்ள புதர் பகுதியில் மறைவதும் பின்னர் மீண்டும் வெளியே வருவதுமாக போக்கு காட்டி வருகிறது. சமயபுரம் பகுதியில் சாலையை கடந்த ஊருக்குள் நுழைந்த காண்போரை கதிகலங்க வைக்கும் பிரமாண்டமான பாகுபலி யானையை அங்குள்ள தெரு நாய்கள் அச்சப்படாமல் விரட்ட முயல்கின்றன.
யானை புதர் மறைவில் இருந்து வெளியே வரத்துவங்கியதும் குடியிருப்பு வாசிகளை யானையின் வருகை குறித்து எச்சரிக்கும் வகையில் குரைக்க துவங்கும் நாய்கள் பின்னர் யானை வந்தவுடன் அதனை விடாமல் பின் சென்று குரைத்தபடி விரட்ட முயல்கின்றன. இதனால் கோபமடையும் யானை நாயை நோக்கி திரும்பி பிளிறி அச்சுறுத்த முயன்றாலும் நாய்கள் யானை அவ்விடத்தை விட்டு செல்லும் வரை பின் தொடர்ந்து குரைத்தபடி செல்கின்றன. இதனால் யானை குடியிருப்பு பகுதியை விட்டு வேகமாக நகர்ந்து செல்கிறது. ஊருக்குள் யானை நுழையும் போது தெரு நாய்களின் இந்த எதிர்ப்பு தங்களை பாதுகாக்கவே என்றாலும் எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சத்திலேயே இருப்பதாக கூறும் சமயபுரம் பகுதி மக்கள் பாகுபலி யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM