பெங்களூரு: மாண்டியா நகரின், வைர வியாபாரியை கடத்தி கொள்ளையடித்த, வில்லன் நடிகர் உட்பட, மூவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், மாண்டியாவை சேர்ந்த வைர வியாபாரியொருவர், பணி நிமித்தமாக ஏப்., 20ல், பெங்களூருவந்திருந்தார்.பணியை முடித்து இரவு 11:30 மணியளவில், சிவானந்த சதுக்கம் வழியாக காரில், மாண்டியாவுக்கு புறப்பட்டார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்மகும்பல், தங்கள் காரில் வியாபாரியை கடத்தி ராம்நகர் வழியாக, கனகபுரா, ஹாரோஹள்ளி, மாண்டியாவில் சுற்றித்திரிந்து, கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
24.5 லட்சம் ரூபாய் ரொக்கம், ஆறு வங்கி காசோலைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.இது தொடர்பாக, வியாபாரியின் புகாரின்படி, ஹைகிரவுன்ட், மஹாலட்சுமி லே – அவுட் போலீஸ் நிலைய போலீசார் விசாரித்து ரவுடி நாராயணா, 55, உமேஷ், 37, நுாதன், 37, ஆகியோரை கைது செய்தனர். 15 லட்சம் ரூபாய் ரொக்கம், கார் உட்பட, மற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கைதான நாராயணா, கன்னடத்தில் ‘வீர பரம்பரே, துஷ்டா, 3வது கிளாஸ் மஞ்சா’உட்பட, 40 படங்களில், வில்லனாக நடித்தவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது கூட்டாளி உமேஷ், கார் ஓட்டுனராக பணியாற்றுகிறார்.தன் எஜமானரின் நண்பரான வைர வியாபாரியின் நடவடிக்கையை கண்காணித்து, மற்ற இருவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொள்ளையடித்தது, விசாரணையில் தெரிந்தது.
Advertisement