புட்காம்: காஷ்மீரில் நேற்று காலை வங்கி அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் மக்ரேபோராவில் ஒரு செங்கல் சூளை உள்ளது. அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் அந்த செங்கல் சூளைக்கு வந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பிஹாரை சேர்ந்த தில்குஷ் குமார் உயிரிழந்தார். மற்றுமொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நேற்று காலை, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அரே மோகன்போரா பகுதியில் எலக்கி டெஹாட்டி வங்கிக் கிளை உள்ளது. இந்நிலையில் தீவிரவாதி ஒருவர் இந்த வங்கிக் கிளைக்குள் நுழைந்து, மேலாளர் விஜய்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் மாவட்டத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் இங்கு பணியில் சேர்ந்தார்.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் காஷ்மீரில் இதுவரை 8 பேர் இவ்வாறாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்துமே வெளிமாநில தொழிலாளர்களை, இந்துக்களை குறிவைத்து நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து, காஷ்மீரில் நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறித்து விவாதித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் இதில் கலந்து கொண்டார்.