புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் இல்லை. அதனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத் திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனால், புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என, மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. அதனையொட்டி, மாநில கல்வி வாரியம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.
சி.பி.எஸ்.இ., அறிமுகம்
கடந்த 2011ல் ஆட்சி பொறுப்பேற்ற என்.ஆர்.காங்., அரசு மாநிலத்தில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. அதனையொட்டி, முதல்கட்டமாக கடந்த 2014-15ம் கல்வி ஆண்டு துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 5ம் வகுப்பிற்கும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
மீண்டும் தமிழக பாடத் திட்டம்
அதன்பிறகு அடுத்த கல்வி ஆண்டில் 6ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை விரிவாக்கம் செய்திட அப்போதைய காங்., அரசு முயற்சிக்கவில்லை. இதனால், 5ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்து வந்த மாணவர்கள் வேறு வழியின்றி 6ம் வகுப்பில் இருந்து தமிழக பாடத்திட்டத்தை படித்து வருகின்றனர்.
அரசு புதிய முயற்சி
இந்நிலையில் தற்போதைய அரசு, 6ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி முறையான புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதனால், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை 6ம் வகுப்பில் இருந்து படிப்படியாக விரிவாக்கம் செய்திட புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.அதனையொட்டி, இந்த கல்வி ஆண்டில் 6ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளது.
6ம் வகுப்பு
குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை குறித்த அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநிலத்தில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.இதன் காரணமாக இந்த கல்வி ஆண்டில் 6ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
கல்வி அமைச்சர் உறுதி
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை கேட்டபோது, ‘மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஏற்கனவே 5ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.வரும் கல்வி ஆண்டில் 6ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இதற்கான அனுமதி பெறுவதற்காக கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் டில்லி செல்ல உள்ளனர்’ என்றார்.