கோவை மக்களை இன்னிசை மழையில் நனைய விட்ட இளையராஜா – குடும்பத்தை விட இசையோடு இருந்த நேரம் அதிகம் என நெகிழ்ச்சி
கோவை : கோவையில் மழையாய் பொழிந்த இளையராஜாவின் இசையில், கோவை மக்கள் நனைந்து ரசித்தனர். 'இசைஞானி' இளையராஜாவின் 80வது பிறந்த நாளையொட்டி இசை நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடந்தது. 'ஜனனி… ஜனனி…' பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.
பாடல்களுக்கு இடையிடையே இளையராஜா பேசுகையில், ''உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதாவது நிகழ்வு, எனது ஒரு பாடலுடன் தொடர்பு இருக்கும். ஏதாவது ஒரு நிகழ்வு எனது பாடலை நினைவுப்படுத்தும். முன்னாள் முதல்வர் கருணாநிதி எனது தந்தைக்கு சமமானவர். பொதுமேடையில் எனக்கு, 'இசைஞானி' என பட்டம் அளித்து அவர் என்னை கவுரவித்தார்,'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛என் மனைவி குழந்தைகளோடு இருந்த நேரத்தை விட இசையோடு இருந்த நேரம் அதிகம். ராஜா, நலம் வாழ எந்நாளும் படலை பாடினார்கள். நான் என் மனைவி குழந்தைகளோடு அதிகம் நேரம் செல்விட்டது இல்லை. ஆனால் நான் இசைக்கு தான் அதிகம் நேரம் செலவிட்டு உள்ளேன். என் இசை பயணத்திற்குதோள் கொடுத்தவர்கள், என்னோடு பணி செய்த இசை குழுவினர், அவர்களது உணர்வுகளை மனம் ரசிக்கும்படி உங்களுக்கு பாடல் கொடுக்கும் எண்ணம் மட்டுமே எனக்கு இருந்துள்ளது என்று உருக்கமாக பேசினார் இளையராஜா.
இசை நிகழ்ச்சியை, 'சக்தி மசாலா' இயக்குனர் சாந்தி, கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தலைவர் மலர்விழி, பார்க் கல்வி நிறுவன தலைவர் அனுஷா உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், இசைஞானிக்கு பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார்.
திரைப்பிரபலங்கள் பங்கேற்பு
இந்த இசை நிகழ்வில் கங்கை அமரன், உதயகுமார், அம்பிகா, ஶ்ரீகாந்த், வந்தனா ஸ்ரீகாந்த், ஜான் விஜய், பாடகர் வேல்முருகன், தலைவாசல் விஜய், அம்மு, அபிரமி, ரமேஷ் கண்ணா, ‛மாஸ்டர்' மகேந்திரன், ‛மெஹந்தி சர்க்கஸ்' ரெங்கராஜன், அனிதா சம்பத், சூர்யா சகோதரி பிருந்தா, தன்ஷிகா, மெட்ராஸ் ரித்திகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின், ஸ்பான்ஸர்களாக சக்தி மசாலா, கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், மார்க், ஜேஎம்ஜே ஹவுசிங் புராஜெக்ட்ஸ், கிரீன் பீல்ட்ஸ், ஹேக்கர்ஸ் ஆதித்யா ஏஜன்சி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. ஊடக பங்குதாரராக, 'தினமலர்' நாளிதழும் கைகோர்த்தது.திரளான ரசிகர்கள் பங்கேற்று இசை மழையில் நனைந்தனர்.