புதுடெல்லி: காஷீரில் நேற்று ( ஜூன் 2) ஒரே நாளில் இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
காஷ்மீரில் நேற்று காலை, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அரே மோகன்போரா பகுதியில் எலக்கி டெஹாட்டி வங்கிக் கிளை உள்ளது. இந்நிலையில் தீவிரவாதி ஒருவர் இந்த வங்கிக் கிளைக்குள் நுழைந்து, மேலாளர் விஜய்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் மாவட்டத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் இங்கு பணியில் சேர்ந்தார்.
வங்கி அதிகாரி படுகொலையைத் தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் செங்கல் சூளையைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். அவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
கடந்த செவ்வாய்க் கிழமை பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்டார்.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் காஷ்மீரில் இதுவரை 8 பேர் இவ்வாறாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கண்டனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து, காஷ்மீரில் நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறித்து விவாதித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் இதில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருடன் அமித் ஷார் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்
பண்டிட்டுகள் கோரிக்கை: தொடர்ந்து இந்துக்கள் படுகொலை செய்யப்படும் சூழலில் காஷ்மீர் வாழ் பண்டிட்டுகள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீநகரில் நூற்றுக்கணக்கான பண்டிட்டுகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் காஷ்மீரில் இருந்து வெளியேறவும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பண்டிட்டுகள் வாழும் முகாம்கள் உள்ள பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், தங்களை வலுகட்டாயமாக காஷ்மீரில் தங்கவைக்க அரசு முயற்சிப்பதாக பண்டிட்டுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.