காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் நிலை தலைவராக குலாம் நபி ஆசாத் பணியாற்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்ட நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் ஜி23 குழுவில் உள்ள குலாம் நபி ஆசாத், ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து கட்சியின் திட்டம் உட்பட பல விஷயங்கள் குறித்து .விவாதித்துள்ளார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் நிலை தலைவராக பணியாற்ற முன்வருமாறு குலாம் நபி ஆசாத்திடம் சோனியா காந்தி கேட்டுக் கொண்டதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது. கட்சியை வழி நடத்தும் இளைஞர்களின் சிந்தனைக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி வந்துவிட்டதாக குலாம் நபி ஆசாத் கூறியதாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், சமீபத்தில் சோனியா காந்தியால் அமைக்கப்பட்ட அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் உள்ள குலாம் நபி ஆசாத், கட்சியின் பணிகளில் கூட அதிக அக்கறை காட்டுவதில்லை என்று ஏஎன்ஐ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், உதய்பூரில் நடைபெற்ற சிந்தன் ஷிவிரில், குழுவின் கூட்டங்களில் குலாம் நபி ஆசாத் மிகக் குறைவாகவே பேசியதாக கூறப்படுகிறது. பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றும் குலாம் நபி ஆசாத்தை , பீகாரில் இருந்து ஒரு பிராந்திய கட்சி ராஜ்யசபாவுக்கு அனுப்ப முன்வந்தது. ஆனால் தனது கடைசிக் காலம் காங்கிரஸ் கொடியின் கீழ் தான் கழியும் எனக்கூறி அவர் நிராகரித்திருந்ததாகக் கூறப்படுகிறது .
இதையும் படிக்கலாம்: ”தோல்வியை நினைத்து நாம் வருத்தப்பட வேண்டியதில்லை”- தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா காந்திSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM