சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்; சேவையை தொடங்க உள்ள கார்டெலியா நிறுவனம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமையன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
கப்பலின் பயணத்திட்டம், கட்டணம் குறித்து விரிவாக பார்க்கலாம். சட்டமன்றத்தில் அறிவித்தபடி, சொகுசு கப்பல் சுற்றுலா திட்டமானது சென்னையில் செயல்படுத்தப் படவுள்ளது. நாட்டின் பல்வேறு துறைமுகத்தில் சேவை வழங்கிவரும் கார்டெலியா (Cordelia) கப்பல் நிறுவனம், சென்னையிலும் தனது சேவையை தொடங்குகிறது. இரண்டு வகையான பயணத்திட்டங்களுடன், நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அம்சங்களுடனும் சேவை வழங்க வருகிறது கார்டெலியா.
சென்னை துறைமுகத்திலிருந்து ஜூன் 4ஆம் தேதி சுற்றுலாவைத் தொடங்கும் கப்பல், ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீண்டும் 6ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளது. ஒரு நபருக்கான ஆரம்ப கட்டணம் 22 ஆயிரத்து 915 ரூபாய். அது, அறைகளின் அளவு, வசதிகள், கடல் அழகை ரசிக்கும் வகையிலான அமைப்பு என 29,568 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 80,000 ரூபாய் என மாறுபடுகிறது.
image
மற்றொரு சுற்றுலாத் திட்டம் ஜூன் 6ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு 8ஆம் தேதி விசாகப்பட்டினம், 10ஆம் தேதி புதுச்சேரி, 11 ஆம் தேதி சென்னை திரும்பும்வகையில் 54 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.37 லட்ச ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், விளையாட்டு தளங்கள், திரையரங்கம், விருந்து, கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள், அலுவலக மீட்டிங்குகளும் நடத்தலாம். இந்த கப்பல் சேவையை வரும் சனிக்கிழமையன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை துறைமுகத்திலிருந்து தொடங்கி வைக்க உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.