உக்ரைனில் மனித உரிமை மீறல்- ரஷியா மீது சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு

நியூயார்க்:
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படையினர் உக்ரைனில் தாக்குதல் நடத்திய போது மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து ரஷிய படைகள் செய்த குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் உஸ்ராசேயா கூறியதாவது:-
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 100 நாட்களில் ரஷிய படைகள், உக்ரைனில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் மீது குண்டு வீசி தெருக்களில் பொது மக்களை வரிசையாக கொன்று குவித்துள்ளது.
இதை உலக நாடுகளும் பார்த்து வருகின்றன. உக்ரைனில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் பற்றி சர்வதேச விசாரணைக்கு ஆதரவு அளிக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷியா மீதான சர்வதேச விசாரணைக்கு கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை அயர்லாந்து அட்டர்னி ஜெனரல் பால் கல்லாகர் வரவேற்றுள்ளார்.
அவர் கூறுகையில், ‘இதற்காக பரிந்துரைத்த 41 நாடுகளில் அயர்லாந்தும் ஒன்று. ரஷிய குற்றங்களை விசாரிக்கவும், உக்ரைன் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கவும் 42 புலனாய்வாளர்கள், தடய வியலாளர் வல்லுனர்கள் மற்றும் துறை ஊழியர்களை கொண்ட குழுவை நீதிமன்றம் நியமித்துள்ளது’ என்றார்.
இதுதொடர்பாக ரஷியாவின் ஐ.நா.தூதர் வசிலி நெபென்சியா கூறுகையில், ‘உக்ரைனில் நடைபெறுவது சிறப்பு ராணுவ நடவடிக்கை ஆகும். ஆனால் சர்வ தேச விசாரணை என்று மேற்கத்திய நாடுகள் திடீரென்று ‘பாசாங்குத்தனம்’ காட்டுகின்றன’ என்று குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.