ஆரூர்தாசுக்கு விருது, ரூ.10 லட்சம் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:

தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி விருதாளரை தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன் தலைமையில் நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த குழு 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கான பல நூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாசை (வயது90) தேர்ந்தெடுத்தது.

திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர்.

அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கி கவுரவிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தி.நகரில் உள்ள ஆரூர்தாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.

அங்கு ஆரூர்தாசுக்கு பொன்னாடை போர்த்தி, ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கினார். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கி கவுரவித்தார்.

அப்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், செய்தித்துறை உயர் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.