சென்னை:
மாலை மலர் இணையதளத்திற்கு டாக்டர் ஷர்மிளா அளித்த சிறப்பு பேட்டியில், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் குற்றவாளியா இல்லையா என்பதில் நிறைய கேள்விகள் உள்ளன. விசாரணை நடைபெற்ற நேரத்தில் நிறைய மறைக்கப்பட்டுள்ளன. ராஜிவ்காந்தி படுகொலையில் சர்வதேச சதி இருப்பதாகவும், எல்டிடிஈயினர் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டனர் என்பது குறித்தும்ம் நிறைய புத்தகங்கள் வெளி வந்துள்ளன.
இந்த வழக்கில் பேரறிவாளன் குற்றவாளிதான், அதை நாம் மறுக்க முடியாது. அவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்து விட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக ராகுலும், சோனியாகாந்தியும் எப்போதோ சொல்லிட்டாங்க.
விடுதலையான பிறகு பேரறிவாளனுக்கு பல்வேறு கட்சித் தலைவர் பொன்னாடை போர்த்தி வரவேற்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமானதுதான். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியினர் அவர்களது தலைவரை இழந்திருக்கின்றனர். பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது தேவையில்லாதது.
அண்ணாமலைக்கு நிலையான கொள்கை கிடையாது. பேரறிவாளன் விடுதலையில் பாஜக அரசு காலம் தாழ்த்தியது ஏன்? ஆளுநர் ஏன் இதை இவ்வளவு நாட்கள் கிடப்பில் போட்டிருந்தார். பேரறிவாளன் விடுதலையில் அக்கறையிருந்தால், உச்சநீதிமன்றத்தில் அவரது விடுதலைக்கு எதிராக பாஜக அரசு ஏன் வாதாடியது.
பாஜக அரசு மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டது. பணவீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்து விட்டது. வேலை வாய்ப்பினை அதிகரித்து விட்டது.
எந்த மசூதியை இடிப்போம் எந்த கோயிலை கட்டுவோம் என்று மதசார்ந்த பிரச்சினை மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார்கள்.
அண்ணாமலையும் அர்ஜூன் சம்பத்தும் ஒன்றுதான். பாஜகவை பற்றி மக்கள் தினமும் பேச வேண்டும் என்று கருதியே அண்ணாமலை குற்றச்சாட்டுகளை தினமும் சொல்லி வருகிறார்.
மோடி அரசு முதல் முறையாக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் கிடப்பில் உள்ளன. 2வது முறையாக கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப் படவில்லை.
அரசியல் கிம்மிக்ஸ் பண்ணி மக்களை பாஜகவினர் ஏமாற்றி வருகின்றனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையடா என்று கேட்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும். மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதை திசை திருப்புவதற்காக பாஜக தேவையில்லாத விஷயங்களை செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.