புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அரே மோகன்போரா பகுதியில் எலக்கி டெஹாட்டி வங்கிக் கிளை உள்ளது. இந்நிலையில் தீவிரவாதி ஒருவர் இந்த வங்கிக் கிளைக்குள் நுழைந்து, மேலாளர் விஜய்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் மாவட்டத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் இங்கு பணியில் சேர்ந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து போலீஸார் அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிரவாதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குல்காம் மவட்டத்தில் ஜம்முவை சேர்ந்த ரஜ்னி பாலா என்ற ஆசிரியை கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்துக்கள் மீது இம்மாவட்டத்தில் 3 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அசோக் கெலாட் கண்டனம்
மேலும் அண்டை மாவட்டமான ஷோபியானில் 2 முக்கிய தாக்குதல் சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஷோபியானில் பரூக் அகமது ஷேக் என்பவர் அவரது வீட்டில் நேற்று முன்தினம் மாலை தீவிரவாதிகளால் சுடப்பட்டு காயம் அடைந்தார்.
ஷோபியானில் நேற்று காலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
வங்கி மேலாளர் விஜய்குமார் கொலைக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள அவர், குடிமக்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மற்றொரு பதிவில் விஜய்குமார் குடும்பத்துக்கு அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் ராகுல் பட் என்ற அரசு ஊழியர் உள்ளிட்ட இருவர் மற்றும் 3 போலீஸார் கடந்த 2 மாதங்களில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்முவில் நேற்று நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்களை சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தக்கோரி பேரணி நடத்தினர்.
அமித் ஷா ஆலோசனை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து, காஷ்மீரில் நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறித்து விவாதித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் இதில் கலந்து கொண்டார்.