புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது.
அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது.
அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது.
இதன்மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90 கோடி கடனுக்கு சமமான பங்குகளை பெற்றதாகவும், இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக பணமோசடி வழக்கு ஒன்றை அமலாக்கத்துறை பதிவு செய்தது.
இந்த வழக்கில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை கடந்த மாதம் விசாரணை நடத்தியது.
இந்தநிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேற்று முன்தினம் ‘சம்மன்’ அனுப்பியது. அதில், சோனியாகாந்தி 8-ந்தேதியும், ராகுல்காந்தி ஜூன் 2-ந்தேதியும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது.
ராகுல் காந்தி தற்போது இந்தியாவில் இல்லாததால், 5-ந்தேதிக்கு பிறகு விசாரணையை தள்ளிவைக்குமாறு அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதினார்.
ராகுல்காந்தியின் கடிதத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பரிசீலித்தனர். பிறகு அவரது கோரிக்கை ஏற்றுக் கொண்டனர். அடுத்த கட்டமாக ராகுலை விசாரணைக்கு எப்போது அழைப்பது என்று ஆய்வு செய்தனர். அதன்படி வருகிற 13-ந்தேதி ராகுலை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது.
ராகுல் 13-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியது. ராகுலிடம் பணப்பரிமாற்றம் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தப் போவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.