தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் சிறுமியை வன்புணர்வு செய்து, 8 முறை கருமுட்டையை விற்ற கொடூர தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது முதல் கணவர் இறந்த நிலையில் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
அதன் பின்னர், சையத் அலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம் என சையத் அலி கூறியதை அப்பெண் ஏற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த பெண் கருமுட்டைகளை விற்று வந்த நிலையில், சையத்தின் வற்புறுத்தலின் பேரில் தனது மகளையும் கருவுற செய்து கருமுட்டைகளை விற்க முடிவு செய்துள்ளார்.
இதனால் அப்பெண்ணின் மகள் 12 வயதில் இருக்கும்போதே சையத்தின் வன்புணர்வுக்கு ஆளானார். இவ்வாறாக தொடர்ச்சியாக 4 ஆண்டுகளில் குறித்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு, அவரது கருமுட்டை 8 முறை தனியார் மருத்துவமனைக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரின் துன்புறுத்தலால் மனவேதனைடையந்த குறித்த சிறுமி, கடந்த 20ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி, தனது தந்தையின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்து அவரது தாயும், சையத் அலியும் சிறுமியை ஈரோட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்ட உறவினர்கள் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில், 16 வயதாகும் சிறுமையை 22 வயதான திருமணமான பெண் என ஆவணங்களை மாற்றி கருமுட்டையை விற்று வந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர் சிறுமியின் தாய், சையத் அலி மற்றும் இவர்களுக்கு கருமுட்டையை விற்க உதவியாக இருந்த மாலதி என்ற பெண்ணையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உட்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.