புதுடெல்லி: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெஞ்சமின் கேன்ட்ஸ் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு பாதுகாப்பு உறவை மேம்படுத்த இரு அமைச்சர்களும் உறுதி மேற்கொண்டனர்.
கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உதயமானது. புதிய நாட்டை கடந்த 1950 செப்டம்பர் 17-ம் தேதி இந்தியா அங்கீகரித்தது. எனினும் இரு நாடுகளிடையே கடந்த 1992 ஜனவரி 29-ம் தேதியில் இருந்தே ராஜ்ஜிய ரீதியான உறவு தொடங்கியது. இரு நாட்டு உறவின் 30-வது ஆண்டு தினம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெஞ்சமின் கேன்ட்ஸ் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவர் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது இருநாட்டு பாதுகாப்பு உறவை மேம்படுத்த இருவரும் உறுதி மேற்கொண்டனர். பாதுகாப்பு ஆராய்ச்சி, ஆயுதங்கள் உற்பத்தியில் இணைந்து செயல்படுவது குறித்து இரு நாடுகளின் அமைச்சர்களும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக ஆளில்லா சிறிய ரக விமானங்களை இணைந்து தயாரிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன்படி மத்திய அரசின் டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேல் அரசின் ஆர்.டி. நிறுவனங்கள் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. சர்வதேச, பிராந்திய நிலவரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். இரு நாடுகளும் தொலைநோக்கு கொள்கையை பின்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி பாதுகாப்பு துறையில் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயல்படும். இரு நாடுகள் இடையிலான ராஜ்ஜிய, பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரையும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று சந்தித்தார்.
சர்வதேச புள்ளிவிவரங்களின்படி ரஷ்யாவிடம் இருந்து 49% ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதுபோல பிரான்ஸிடமிருந்து 18%, இஸ்ரேலிடமிருந்து 13% ஆயுதங்களை கொள்முதல் செய்கிறது. பாதுகாப்புத் துறையில் இந்தியா, இஸ்ரேல் இடையிலான உறவு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதேபோல வேளாண் துறையிலும் இந்தியாவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இஸ்ரேல் வழங்கி வருகிறது.